“முந்திரிக்கொட்டை மாதிரி பேசாதே” – ஊர்வசியை அதட்டிய பாக்யராஜ்..!

தன்னுடன் நடித்த நடிகைகள் மட்டுமல்ல, உடன் நடிக்காத சீனியர் நடிகைகளையும் இன்று நடைபெற்ற தனது ‘துணை முதல்வர்’ இசைவெளியீட்டு விழாவிற்கு அழைத்து அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார் இயக்குனர் பாக்யராஜ். நீண்ட இடைவெளிக்குப்பின் பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘துணை முதல்வர்’. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக ஜெயராமும் உண்டு. கதாநாயகிகளாக ஸ்வேதா மேனன், சந்தியா இருவரும் நடித்துள்ளார்கள்.

 

பாக்யராஜ் கதை-வசனம் எழுத, விவேகானந்தன் என்பவர் இயக்கியுள்ளார். இன்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சீனியர் ஹீரோயின்களான சுகாசினி, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, ரேகா, மீனா, ரோகிணி, கோவை சரளா, ராதிகா, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரை அழைத்து, அவர்களை மட்டுமே மேடையில் அமரவைத்து அழகு பார்த்தார் பாக்யராஜ்.

 

விழாவில் ஊர்வசி பேசும்போது பாக்யராஜை வாத்தியார் என்றே குறிப்பிட்டார். அத்துடன் தனது திரையுலக பயணம் குறித்து பேசும்போது, “என் அக்கா கலாரஞ்சனி நடிக்கவேண்டிய கேரக்டர் தான் முந்தானை முடிச்சு படத்தில் நான் நடித்தது,. முதலில் என்னை பார்த்த பாக்யராஜ், நான் தொண தொணவென்று பேசுவதை பார்த்துவிட்டு முந்திரிக்கொட்டை மாதிரி பேசாதே என அதட்டினார். ஆனால் இன்று கமல் உட்பட பலர் நான் நன்றாக நடிப்பதாக சொல்ல காரணமே என் வாத்தியார் பாக்யராஜ் தான்” என்று புகழ்மழை பொழிந்தார். விழா நிகழ்வுகளை இயக்குனரும் நடிகரும் பாக்யராஜின் மாணவருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.