அரசியலில் நுழைவது எப்போது..? சூசகமாக தகவல் சொன்ன ரஜினி..!

ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டார்கள்.

இயக்குனர்கள் ஷங்கர், அமீர், சேரன் உட்பட பல வி.ஐ.பிகள் இந்தவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்திப்பெசியதொடு, அவரை அரசியலுக்கு வருமாறு கோரிக்கையும் வைத்தார்கள்.. இந்த விழாவில் பலருக்கும் நன்றி தெரிவித்து பேசிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்த தயக்கம் பற்றி பேசினார்..

‘கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் பண்ணாமல், மற்றொரு படத்தை பண்ண மனசு வரவில்லை. நிறைய கதை கேட்டிருந்தாலும், எதுவுமே தலைக்குள் போகவே இல்லை. முதல்ல ‘கோச்சடையான்’ வெளியாக வேண்டும் என்று இருந்தேன்.

‘கோச்சடையான்’ வெளியான பிறகு பார்த்த 20 பேர்களில் 10 பேராவது என்கிட்ட “என்ன சார், கடைசியிலாவது ஒரு சீன் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்று சொன்னார்கள். ஆரம்பித்திலாவது ஒரு ப்ரேமிலாவது வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் என்று சொன்னார்கள். நீங்க இப்போ எப்படி இருக்கீங்கன்னு பார்க்க ஆசைப்பட்டோம் என்று சொல்லவும், உடனே ஒரு படம் ஆரம்பிக்கணும் என்று திட்டமிட்டேன்.

அப்போ தான் கே.எஸ்.ரவிக்குமார் “சார்.. என்னுடைய உதவி இயக்குநர் பொன்.குமரன் ஒரு கதை வைச்சிருக்கார். சரியா இருக்கும். கேட்குறீங்களா” என்றார். கேட்டேன், பிடித்திருந்தது. நிறைய கேப் விழுந்துவிட்டது, இந்த படத்தை பண்ண வேண்டும் என்றால் மூன்று வருஷமாகும். 6 மாதத்தில் செய்ய முடியுமா என்றால், அதை செய்யக் கூடிய ஒரே நபர் கே.எஸ்.ரவிக்குமார் தான். கே.எஸ்.ரவிக்குமாரோ சுதீப்பை வைத்து படம் பண்ணுவதாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டு வந்தார்.

அப்போது ஆரம்பித்தது இந்தப் படம். 10:30 மணிக்கு தான் முதல் ஷாட், மதியம் 3:30 மணி வரை ரெஸ்ட் என என்னை குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். இவ்வளவு பெரிய பட்ஜெட், பெரிய டெக்னிஷியன்கள் எல்லாம் வைத்து கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும். டிசம்பர் 12ம் தேதி வெளியிடுவதற்கு எல்லா வேலைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.

அமீர், சேரன், விஜயகுமார், வைரமுத்து எல்லாம் அரசியல் பற்றி பேசினார்கள். சூழ்நிலை தான் என்னை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறது. நாளைக்கும் ஒரு சூழ்நிலை தான் தீர்மானிக்கும். அரசியல் பற்றி கொஞ்சம் எனக்கு தெரியும். எவ்வளவு ஆழம், ஆபத்து என்று தெரியும். யார் யார் தோள் மீது எல்லாம் மிதித்து அங்கே போகணும் என்று எனக்கு தெரியும்.

அவ்வாறு போனால் கூட, அங்கு சென்று நினைத்தை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. காற்று அழுத்த தாழ்வு நிலை என்பது தானாகவே அமையும். அரசியலில் ஆழத்தை நினைத்து தயங்குகிறேன். அரசியலை நினைத்து பயப்படவில்லை, தயங்குகிறேன் அவ்வளவு தான்.

இவ்வளவு பேர் அரசியல் என்று பேசியதால், பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பேசாமல் போய் இருந்தால் திமிராகி விடும். எது இருந்தாலும் கடவுள் தீர்மானிப்பார். அது என்னவோ எனக்கு தெரியாது. என்னவாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்” என்றார். ரஜினிகாந்த்