ஞானகிறுக்கன் – விமர்சனம்

சிறுவயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போய் திருச்சியில் லாட்ஜில் வேலைக்கு சேருகிறார் ஜெகா. பல வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஜெகாவை குடும்பம் பாசத்துடன் அரவணைக்க, கூடவே முறைப்பெண்ணுடன் காதலும் துளிர்க்கிறது. ஆனால் அம்மாவின் கோபத்தால் காதல் நசுங்க, மீண்டும திருச்சிக்கே கிளம்புகிறார் ஜெகா.

ஆனால் பொய்க்குற்றம் சாட்டி அவரை வெளியே தள்ளுகிறது திருச்சி. அங்கிருந்து சென்னைக்கு வரும் ஜெகாவுக்கு பிச்சைக்கார பெண்ணான அர்ச்சனா கவியும், நல்லமனம் கொண்ட தம்பிராமையாவும் அறிமுகமாகிறார்கள். சென்னை வாழ்க்கை இவர்களைப்போன்ற சாமானியர்களை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதுதான் இடைவேளைக்குப்பின்னான கதை.

ஜெகாவின் தந்தையாக வித்தியாசமாக அறிமுகமாகும டேனியல் பாலாஜி ஆரம்பத்திலேயே இதில் ஏதோ இருக்கிறது என நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அவருக்கு மனநிலை தவறியதும், ஜெகா ஊரைவிட்டு ஓடுவது, மீண்டும் திரும்பவது என இடைவேளைவரை சரியான பாதையில் பயணிக்கும் கதை சென்னைக்கு வந்ததும் சண்டிமாடு மாதிரி நகராமல் நொண்டி அடிக்கிறது.

அநியாயத்துக்கு நல்லவராக, பாசக்காரப்பையனாக இருக்கிறார் ஜெகா.. ஆனால் குருவி தலையில் பனங்காய் போல போகப்போக அதுவே ஓவர்டோஸாகி விடுகிறது. அபலைப்பெண்ணாக வந்து அடைக்கலமாகும் அர்ச்சனாகவியின் நடிப்பு பரவாயில்லை என்றாலும் தொடர்ந்து அவரது சோக முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பது அலுப்பூட்டுகிறது.

டேனியல் பாலாஜியின் நடிப்பும் கேரக்டரும் நமக்கு புதுசு. ஆனால் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவர் வேலை முடிந்துவிடுவது ஏமாற்றமே. ஜெகாவின் அம்ம்மாவாக வரும் ‘பசங்க’ செந்திதான் உண்மையான கதையின் நாயகி என சொல்லும் அளவுக்கு சிறப்பான குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் கிராமத்து முறைப்பெண்ணாக வரும் சுஷ்மிதா நம் கண்களில் நிறைகிறார். ஊரை விட்டு ஓடிவரும் காதலர்களுக்கோ, அனாதைகளுக்கோ அடைக்கலாம் கொடுப்பவர் என்றால் அது தம்பிராமையாவைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும். இதிலும் அதேதான்.

தாஜ்நூரின் இசையிலும், செல்வகுமாரின் ஒளிப்பதிவிலும் கிராமத்துமணம் கமழ்கிறது. வித்தியாசமான கதைக்களைத்துக்கான எதிர்பார்ப்பை கொடுத்துவிட்டு, இடைவேளைக்குப்பின் இயக்குனர் இளையதேவன் திசைமாறி போய்விட்டாரே என்கிற எண்ணம் பட முடியும்போது ஏற்படாமல் இல்லை.