யான் – விமர்சனம்

வேலைக்கு போகாமல் ஜாலியாக ஊரை சுற்றும் ஜீவாவுக்கு துளசியை பார்த்ததுமே காதல் பல்பு எரிகிறது. காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தாலும் துளசியின் அப்பாவான நாசர் ஜீவாவுக்கு வேலையில்லாததை குத்திக்காட்டி ரெட் சிக்னல் போடுகிறார்.

உள்ளூரில் வேலை கிடைக்காமல் போகவே (!) ட்ராவல் ஏஜென்ட்டான போஸ் வெங்கட்டின் ஏற்பாட்டின்படி காதலியிடம் சொல்லாமல் கூட பசிலிஸ்தான் என்கிற நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார் ஜீவா. அங்கே ஏர்போர்ட்டில் இறங்கியதும் ஜீவாவுக்கே தெரியாமல் போஸ் வெங்கட் அவரது பேக்கில் வைத்து அனுப்பிய போதைப்பொருள் காரணமாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

ஜீவாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்குகிறார்கள்.. இந்த செய்தி மும்பையில் இருக்கும் துளசிக்கு தெரியவர, அவர் ஜீவாவை காப்பற்ற தனி ஆளாக பசிலிஸ்தான் செல்கிறார். அங்கே சென்றதும் கால் டாக்சி ட்ரைவரான கருணாகரனின் உதவியோடு ஜீவாவை காப்பாற்ற முயற்சிக்கிறார்.. அவர் நினைத்து வந்ததை நிறைவேற்றினார இல்லையா என்பது க்ளைமாக்ஸ்..

இடைவேளைக்கு முன் வரை கலாட்டா காதலனாக உலா வரும் ஜீவா ஜெயிலில் அடைக்கப்படுவது, அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பது என இடைவேளைக்கு பின் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். சொல்லப்போனால் இடைவேளைக்கு பின்னர் தான் அவரை ரசிக்கவே முடிகிறது.
ராதாவின் மகள் என்பதைத்தவிர துளசிக்கு சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு ஒன்றும் இல்லை. க்ளோசப் காட்சிகளில் நம்மை படுத்தி எடுக்கிறார். கால் டாக்சி ஓட்டும் கருணாகரனின் பங்கு இதில் முக்கியமானது. பத்து நிமிடமே வந்தாலும் தம்பி ராமையாவின் குணச்சித்திர வடிவமைப்ப்பு ரசிக்க வைக்கிறது.

ஹாரிஸின் இசையில் ‘நீ வந்து போனது நேற்று மாலை’ பாடல் ரிப்பீட் கேட்கும் ரகம்.. கேமராமேன் மனுஷ் நந்தன் புண்ணியத்தில் பசிலிஸ்தானுக்கு ஒரு ட்ரிப் போய்வந்த அனுபவம் கிடைக்கிறது. இதெல்லாம் சரி.. படம் முழுவதும் விரவி கிடக்கும் லாஜிக் மீறல் விஷயங்களுக்கு இயக்குனர் ரவி.கே.சந்திரன் என்ன விளக்கம் தரப்போகிறார்.

இடைவேளைக்கு முன்பு வரை மும்பையில் கதை நிகழ்வதாக காட்டியிருப்பதால் கதைக்கு என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லையே.. பார்த்ததும் காதல் என்கிற அபத்தம் இதிலும் உண்டு. ஆனால் துளசி கொடுத்த விட்டிங் கார்டு காற்றில் பறந்து பறந்து ட்ராவல் பண்ணுவதெல்லாம் டூ மச்..

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட துளசி, போலீஸ் கமிஷனரான ஜெயபிரகாஷை சீக்கிரம் வருமாறு அழைக்கிறார். ஆனால் ஜீவா, துளசியை காப்பற்றிவிட, தாமதமாக ஸ்பாட்டிற்கு வரும் ஜெயபிரகாஷ் துளசியிடம் அவர் எதற்காக அழைத்தார் என்ற விபரத்தை அந்த காட்சி முடியும் வரை கேட்கவே இல்லை.

ஒரு நாட்டு சிறையில் இருந்து தப்பி, இன்னொரு நாட்டு பார்டர் வழியாக தப்பிப்பது எப்படி சாத்தியமாகும்.. அதேமாதிரி அடுத்த நாட்டு பார்டர் வரை, வில்லனின் சிறிய விமானம் எந்த தடையும் இல்லாமல் பறப்பது நல்ல காமெடி. ஒரு நாட்டின் பார்டர் ஏரியா, பந்த் நடக்கும் மவுன்ட் ரோடு மாதிரி ராணுவ வீரர்களே இல்லாமல் ‘வெறிச்’சென்று இருப்பது என்ன லாஜிக்கோ தெரியவில்லை..? இதுநாள் வரை ஒளிப்பதிவில் தன் ஆதிக்கத்தை செலுத்திவந்த ரவி கே.சந்திரனுக்கு இயக்குனர் அவதாரம் சரியாக பொருந்தவில்லை என்பதை ‘யான்’ தெளிவாக்கியுள்ளது..