தெரியாம உன்ன காதலிச்சுட்டேன் – விமர்சனம்

பக்குவம் ஏற்படாத வயதில் தோன்றும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தானே தவிர அதுவே வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு போதுமானது அல்ல என்கிற குறும்பட தீமை இரண்டு மணி நேரத்துக்கு விரிவாக்க முடிந்தால் அது தான் இந்த ‘தெரியாம உன்ன காதலிச்சுட்டேன்’ படம்

விடலை விஜய் வசந்துக்கும் பள்ளி மாணவி ரஸ்னாவுக்கும் ஏற்படும் காதல் ஒரு வாரத்தில் அவர்களை ஊரைவிட்டு கொடைக்கனலுக்கு ஓடவைக்கிறது.. ஆனால் போன ஒரு வாரத்திலேயே ‘அம்மா தாயே.. தெரியாம உன்ன காதலிச்சுட்டேன்’ என கும்பிடு போடாத குறையாக ரஸ்னாவை திரும்ப கொண்டு வந்து அவர்கள் வீட்டில் சேர்க்கிறார் விஜய் வசந்த்.. நடந்தது என்ன என்பதுதான் கதை.. காதல் என்னவானது என்பது க்ளைமாக்ஸ்.

முதலில் ரஸ்னாவை விரட்டி விரட்டி காதலிப்பது, அவரை பார்க்கும்போதெல்லாம் தேவதை என உருகுவது, ஆனால் அதுவே ஒரு வாரம் ஒன்றாக சேர்ந்து குடித்தனம் நடத்தும்போது ரஸ்னாவின் ‘ஜெனிலியா’த்தனங்களால் டார்ச்சர் ஆவது என தனக்கு எது செட் ஆகுமோ அதை சரியாக செய்திருக்கிறார் விஜய் வசந்த்..

மூன்றாம்பிறை ஸ்ரீதேவியையும் சந்தோஷ் சுப்ரமண்யம் ஜெனிலியாவையும் மிக்ஸ் பண்ணியது போல ஒரு கதாபாத்திரம் தான் ரஸ்னா. கதாநாயகியாக அவரை ரசிப்பதைவிட, ஊரைவிட்டு ஓடி ஒரு வாரம் நடத்தும் ட்ரையல் குடித்தனத்தில் அப்பாவித்தனம் என்கிற பெயரில் அவர் பண்ணும் கலாட்டாக்கள் ரசிக்கவைக்கின்றன.

அட.. ஆச்சர்யமாக வில்லனாகவே தலைகாட்டும் பவனுக்கு இதில் வாழ்க்கை தத்துவம் போதிக்கும் ஜென்டில்மேன் கேரக்டர்..! உருவத்திலும் நடிப்பிலும் பல இடங்களில் 9௦களில் வரும் தாடி வைத்த தியாகராஜனை ஞாபகப்படுத்துகிறார். ஆனால் தன் அக்கா மகள் ஊரை விட்டு ஓடுகிறாள் என தெரிந்தும், அவர் 15 நாள் டைம் கொடுத்து இருவரையும் ட்ரையல் குடித்தனம் நடத்த அனுப்புவதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.. எங்க இருக்கார்யா இப்படி ஒரு தாய்மாமன்..?

இனக்கவர்ச்சியால் ஏற்படும் காதலுக்கு ஆயுசு குறைவு.. அதற்குரிய பக்குவத்தையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளும்போதுதான் அங்கே ‘காதலுக்கு மரியாதை’ கிடைக்கும் என்பதை சில பல லாஜிக் ஓட்டைகளுடன் ஆனால் சின்னதாக சிரிக்கவைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.ராமு