பர்மா – விமர்சனம்

லோனில் கார் வாங்கி பணம் கட்டாதவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்துவரும் தொழில் செய்கிறார் அதுல் குல்கர்னி. அவரிடம் வேலைபார்ப்பவர்கள் சம்பத்தும் மைக்கேலும். தனக்கு எதிராக காய் நகர்த்தும் சம்பத்தை போலீசில் மாட்டிவிட்டு, அவரது இடத்தை கைப்பற்றுகிறார் மைக்கேல்.

ஒரு சமயம் 24 கார்களை சீஸ் செய்யும் வேலையை மைக்கேலிடம் ஒப்படைக்கிறார் அதுல் குல்கர்னி. 24வது காரை தூக்கியவுடன் அதற்காகவே காத்திருக்கும் சம்பத் அந்த காரை மைக்கேலிடம் இருந்து அபேஸ் செய்கிறார். அதுல் குல்கர்னிக்கு மைக்கேல் மீது சந்தேகம் வர, அவரது காதலியான ரேஷ்மி மேனனை சிறைபிடிக்கிறார். மைக்கேல் தனது காதலியை மீட்டாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

லோன் போட்டு கார் வாங்கியவர்களில் பலர் ஒரு கட்டத்தில் தவணை பணம் கட்டமுடியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.. அப்போது அவர்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் காரை சீஸ் பண்ணி எடுத்துக்கொண்டு போவார்கள்… அதைத்தான் ‘பர்மா’ படத்தின் கருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தரணிதரன்.

நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தான் கதாநாயகன் ‘பர்மா’வாக நடித்திருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல படா படா வேலைகளை எல்லாம் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரேஷ்மி மேனன் குட்டி ஏஞ்சலாக நம்மை கவர்கிறார்..

பர்மாவின் கூடவே சுற்றும் ‘பூமர்’ கார்த்தி சபேஷ் காமெடி ஏரியாவை கவனிக்கிறார். ஏற்கனவே வில்லத்தனத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட அதுல்குல்கர்னியும் சம்பத்தும் இதிலும் கொஞ்சம் கொட்டைகளை போட்டிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் இருந்து உருவான சுதர்சன் எம்.குமார் என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் கவர்ந்தாலும் பாடல்களில் சோதிக்கிறார்.

காரை சீஸ் பண்ணித் தருவதற்கென்றே உள்ள ஆட்கள், அவர்களுக்குள் நடக்கும் போட்டி, துரோகங்கள், யார் அதிக காரை சீஸ் செய்வது என்கிற பந்தயம் என நமக்கு தெரியாத புது ஏரியாவில் டீடெய்லாக கதை சொல்லியிருக்கிறார் தரணிதரன்.

கூடவே கோடிகளில் பணக்கடத்தலையும் உள்ளே நுழைத்து சாமர்த்தியம் காட்டியிருக்கிறார். தெரியாமலோ அல்லது தெரிந்தோ இந்தப்படத்திற்கு போகிறவர்கள் பயப்பட தேவையில்லை. அருமையான இரண்டு மணி நேர பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருகிறது இந்த ‘பர்மா’.