வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் கிருஷ்ணாவும் ம.க.ப.ஆனந்தும் (வானவராயனும் வல்லவராயனும்) அண்ணன் தம்பிகள்.. இவர்களுக்குள் அடித்துக்கொண்டு பிறகு ஒன்று சேர்ந்துகொள்வார்கள்.. ஆனால் மற்றவர்களிடம் ஒருவரை ஒருவர் விட்டுத்தர மாட்டார்கள்.

கிருஷ்ணா பக்கத்து கிராமத்தை சேர்ந்த மோனல் கஜ்ஜாரை காதலிக்க, இந்த விஷயம் தெரிந்த மோனலின் அண்ணன் எஸ்.பி.பி.சரண், கிருஷ்ணாவை ஆள் வைத்து அடிக்கிறார். பதிலுக்கு தம்பி ம.க.ப மோனலின் தந்தை ஜெயபிரகாஷை அடித்து வேட்டியை உருவி அவமானப்படுத்துகிறார். இந்த சூழ்நிலையில் காதல் கைகூடியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்..

கிருஷ்ணாவும் ம.க.ப.வும் சண்டைக்கோழிகளாக சிலுப்பிக்கொண்டு வலம் வருகிறார்கள். ம.க.ப நடிகனாக தனது முதல் டெஸ்ட்டிலேயே தேறிவிட்டார். கிராமத்தில் வலம் வரும் நவநாகரிக குயிலாக கிறங்கடிக்கிறார் மோனல் கஜ்ஜார். ஜெயபிரகாஷும் தன் பங்கிற்கு தம்பி சென்டிமென்ட்டில் ஸ்கோர் பண்ணுகிறார்.

ஒல்லியான எஸ்.பி.பி. சரணுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு கோபம் வருகிறதோ தெரியவில்லை.. மிளகாயாக வெடிக்கிறார் மனிதர். கிருஷ்ணா, ம.க.ப.வின் பெற்றோராக வரும் தம்பிராமையா – கோவைசரளா தம்பதியின் ரொமான்ஸ் காமெடி.. குறிப்பாக பால் வற்றிப்போனதற்கு காரணம் சொல்லும் காமெடி இருக்கிறதே.. இளசுகள் தோற்றார்கள் போங்கள்..

இது அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்துவிட்டது கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்பாக என்ட்ரி ஆகும் சந்தானத்தின் காமெடி.. டிக்கெட்டுக்கு கொடுத்த காசு அதற்கே சரியாகிவிடுகிறது. யுவனின் இசையில் பாடல்கள் அவ்வளவாக கவரவில்லையே பிரதர்… அண்ணன் தம்பி கதையை வைத்து லேட்டஸ்டாக ஒரு ‘ஆண்பாவம்’ படைக்க முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜமோகன்.