சிகரம் தொடு – விமர்சனம்

தன்னைப்போல் தன் மகன் விக்ரம் பிரபுவும் போலீஸ் அதிகாரியாகவேண்டும் என நினைக்கிறார் சத்யராஜ். ஆனால் அதில் அதிக நாட்டம் இல்லாத விக்ரம்பிரபு தந்தைக்காக போலீஸ் வேலைக்கு அப்ளை செய்துவிட்டு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். அப்போது போலீஸ் மாப்பிள்ளை என்றாலே பிடிக்காத மோனல் கஜ்ஜாருடன் காதல் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் போலீஸ் பயிற்சிக்கு வரச்சொல்லி கடிதம் வர அதை காதலியிடம் மறைத்து பொய்சொல்லிவிட்டு பயிற்சிக்கு செல்கிறார் விக்ரம்பிரபு. ஆனாலும் அவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது. உண்மை தெரிந்த காதலியை சமாதானப்படுத்த ஒருமாத ட்ரெய்னிங் பீரியடுடன் நின்று விடுவதாக வாக்கு தருகிறார்.

இந்நிலையில் வங்கி ஏ.டி.எம்.களில் திருடும் கொள்ளைக்கும்பல் ஒன்றை சத்யராஜின் உதவியுடன் பிடிக்கிறார் விக்ரம்பிரபு. ஆனால் அவர் இல்லாத நேரத்தில் ஸ்டேஷனில் இருந்து தப்பிக்கும் கொள்ளையர்கள் இருவரும் சத்யராஜை தாக்கிவிட்டு, மோனல் கஜ்ஜாரை கடத்தி வைத்துக்கொண்டு சவால் விடுகிறார்கள்.. காதலியை காப்பாற்ற, தந்தைமீது வெறித்தாக்குதல் நடத்திய அந்த இருவரை பிடிக்க விக்ரபிரபு எடுக்கும் கடைசி இருபது நிமிட ஆக்ஷன் பிளாக் தான் க்ளைமாக்ஸ்..

வரிசையாக ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்க முயலும் விக்ரம் பிரபுவுக்கு இந்தப்படமும் உதவியிருக்கிறது தெரிகிறது. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு அவரது உயரமும் நடிப்பும் நன்றாகவே கைகொடுக்கிறது. விக்ரம் பிரபுவின் பாடி லாங்குவேஜ் சண்டைக்காட்சிகளில் நன்றாகவே வெளிப்படுகிறது. போலி சாமியாரின் குட்டை உடைக்கும் காட்சியில் காமெடியிலும் ஸ்கோர் செய்கிறார்.

திருப்பதியில் லட்டுக்கு பதிலாக மைசூர்பாகு தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார் மோனல் கஜ்ஜார்.. ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோவின் காதலிக்கு என்ன வேலையோ அதை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.

எதிரிகளிடம் சிக்கி ஒரு காலை இழந்த பின்னும் கூட காவல்துறையில் வேலை பார்க்கும் கடமை உணர்வும், தனது மகனையும் போலீஸ் அதிகாறி ஆக்கவேண்டும் என்கிற நாட்டுப்பற்றும் கொண்ட போலீஸ் அதிகாரியாக மிடுக்கான வேடத்தில் சத்யராஜ் ஜொலிக்கிறார்.

வில்லனாக படத்தின் இயக்குனர் கௌரவ் கொடூரம் காட்டியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக கராத்தே மாஸ்டராக நடித்திருப்பவரும் பலே ஆள் தான். முன் பாதியில் சதீஷ், பின் பாதியில் ஈரோடு மகேஷ் என காமெடிக்கு இருவர். கே.பிரபாகரன் இல்லாம கேப்டன் பிரபாகரன்னா சொன்னேன் என சதீஷ் கவுண்ட்டர் கொடுக்கும் இடத்தில் நீங்கள் சிரித்தே ஆகவேண்டும்.. லொள்ளு மனோகருக்கு பூட்டிய வீட்டில் திருட வாய்ப்பு தரும் மகேஷும் சிரிக்கவைக்கவே செய்கிறார்.

டி.இமான் இசையில் ஜேசுதாஸ் பாடியுள்ள அப்பாவை பற்றிய பாடல் நெகிழவைத்தாலும், “டக்கு டக்கு டக்குன்னு” பாடல் தியேட்டரைவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் கூட முணுமுணுக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறது விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு.

அடுத்தவர்களின் ஏ.டி.எம் கார்டை போலியாக தயாரித்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்கும் கும்பல் பற்றி டீடெய்லாக சொல்லி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மெசேஜ் சொல்லியிருக்கிறார் கௌரவ். அதை ஆக்ஷன் பிளாக்கில் சொன்ன விதத்தில் தான் நம் கவனம் ஈர்த்து சிகரம் தொட்டிருக்கிறார்கள் விக்ரம் பிரபுவும் இயக்குனர் கௌரவும்.