சிநேகாவின் காதலர்கள் – விமர்சனம்

தன்னை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, அவரையே நட்பு ரீதியாக அழைத்துக்கொண்டு கொடைக்கானல் பயணம் கிளம்புகிறார் கதை நாயகி சிநேகா. போகும் வழியில், தன காதல் பாதையில் தான் கடந்து வந்த மூன்று காதல்களையும் விவரிக்கிறார். இறுதியில் அவர் மாப்பிள்ளையை மறுத்த காரணமும் கொடைக்கானல் செல்வதற்கான காரணமும் தெரிய வருகிறது. இறுதியில் சிநேகாவின் காதல் தந்த பரிசு என்ன என்பது க்ளைமாக்ஸ்..

கதாநாயகி அத்வைதா அழகாக இருக்கிறார். அவர் தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கல்லூரி மாணவன், சினிமா உதவி இயக்குனர் என அவர் ஒவ்வொரு காலகட்டத்தில் தனக்கு ஏற்படும் காதல் அனுபவங்களை ஜஸ்ட் லைக் தட் அவர் அழகாக தாண்டி வருவது எதார்த்தம்.

காதலர்களாக வரும் உதய்குமார், ஆதிப்ஜெய், திலக், ரத்தினகுமார் ஆகிய நான்கு புதுமுகங்களும் தங்களது நடிப்பை சிறப்பாகவே செய்துள்ளனர். பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் படத்தை இயக்கியுள்ளதால், நீண்ட் நாட்கள் கழித்து பளிச்சிடும் காதல் மற்றும் சமூக நோக்கிலான வசனங்களை காதுகுளிர கேட்க முடிகிறது.

விரசமில்லாத அழகான காதல் கதையை படமாக்கியுள்ளார் முத்துராமலிங்கன்.. அதில் உதவி இயக்குனர் பகுதியும் கொடைக்கானல் ஆதிவாசிகள் பகுதியும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. இது பெண்களுக்கான ‘ஆட்டோகிராப்’ என்று சொல்லலாம்.