ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவு – கமல் இரங்கல்..!

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ‘நைட் அட் தி மியூஸியம்’, ‘ஜூமான்ஜி’, ‘ரோபோட்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ். ஆஸ்கர் விருது பெற்ற இவர், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவர். இந்த ராபின் வில்லியம்ஸ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைச் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், “ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு உடனடியாக கண்ணீரை வரவைப்பது. ஆண்கள் அழுவதற்கு மரியாதை கொண்டுவந்தது ராபின் வில்லியம்ஸ். அவருடைய திறமையால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தற்கொலை செய்து இறந்தாரென்பது உண்மையென்றால், அவர் அவரது வாழ்க்கையை முடிவடையும் தேதிக்கு முன்பே முடித்துகொண்டதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் கமல்.

நடிகர் கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’க்கு மூலமான ‘மிசஸ் டவுட் ஃபயர்’, முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்துக்கு மூலமாகக் கருதப்படும் ‘பேட்ச் ஆடம்ஸ்’, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.