திருமணம் என்னும் நிக்காஹ் – விமர்சனம்

ஜெய்யும், நஸ்ரியாவும் ஒரு ரயில் பயணத்தின்போது வெவ்வேறு முஸ்லீம் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளில் பயணிக்கிறார்கள். அதே பெயரில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பாகி பின்னர் காதலிக்கவும் ஆரம்பிகிறார்கள். ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் வீட்டில் தங்கள் காதலைச்சொல்கிறார்கள்.

ஆனால் அப்போது இருவரின் முஸ்லீம் வேஷமும் அவர்களை அறியாமல் கலைகிறது. இப்போது நிஜ முகங்கள் வெளிப்பட்டதால் அவர்களது மனங்களில் காதல் ஒட்ட மறுக்கிறது.. திருமணத்தை நிறுத்தி இருவரும் பிரிகிறார்கள்.. காதல் மீண்டும் அவர்களை சேர்த்ததா என்பது க்ளைமாக்ஸ்..

ஜெய் மாதிரி சென்சிடிவான ஆட்கள் காதலிக்கும்போது காதலியை கவர எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கும் போவார்கள் என்பதை, காதலிக்காக முஸ்லீம் கலாச்சாரங்களை பழக ஆரம்பிப்பதன் மூலம் சரியாக பிரதிபலித்திருக்கிறார் ஜெய்.

நஸ்ரியாவின் கேரக்டர் அழுத்தம் இல்லாமல் இருந்தாலும் நஸ்ரியாவின் ஒவ்வொரு செய்கையுமே பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. ரயில் பயணியாக வரும் பாண்டியராஜனும், டிக்கெட் புரோக்கராக வரும் மயில்சாமியும் கொஞ்ச நேரம் வந்தாலும் கலகலப்பூட்டுகிறார்கள்.

ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை.. அருமையான கதைக்களம்.. மத அடையாளங்களை மாற்றி காதலிக்கும்போது ஏற்படும் சுவராஸ்யத்தை இடைவேளை வரை, சரியான கோணத்தில் கொண்டு சென்றிருக்கிறார் அனீஸ்.
ஆனால் இருவருக்கும் தங்களது உண்மையான முகங்கள தெரிந்தபின் கதையை எப்படி கொண்டுசெல்வது என தடுமாறி நிற்பது நன்றாக தெரிகிறது.

அதேபோல ஜெய் தனது காதல் திருமணத்தை நிறுத்துவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கிளைமாக்ஸ் சண்டையால் மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வது இவற்றையாவது மாற்றி யோசித்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு படம் தர முயற்சி செய்ததற்காக இயக்குனர் அனீசை பாராட்டலாம்.