நளனும் நந்தினியும் – விமர்சனம்:

நளனுக்கு(மைக்கேல்) சினிமாவில் உதவி இயக்குனராவது லட்சியம். எம்.பி.ஏ படிக்கும் மாமன் மகள் நந்தினி(நந்திதா) மீது காதல். சின்ன விஷயத்திற்காக இரண்டு குடும்பமும் சண்டை போட்டு எதிர்துருவங்களாக மாறுகின்றன. தங்கள் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவார்களோ என நினைத்து காதலர்கள் இருவரும் தாங்களாகவே ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இரண்டு வீட்டார்களும் இவர்களை சேர்த்துக்கொள்ளாமல் தண்ணீர் தெளித்து கதவை சாத்த, சென்னைக்கு வருகிறார்கள் இருவரும். சென்னை இவர்கள் லட்சியத்திற்கு உறுதுணையாக நின்றதா..? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மாமன் மகன்.. அத்தை மகள் காதல்.. அதில் குறுக்கிடும் குடும்பச்சண்டை என்கிற ராமராஜன் காலத்து காதலை, முலாம் பூசி, தன்னம்பிக்கை டானிக் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷன்.

நளனாக புதுமுகம் மைகேல். பல காட்சிகளில் அசட்டுத்தனம் காட்டும்போது ரசிக்க மட்டுமல்ல.. சிலநேரம் கோபத்தையும் வரவழைக்கிறார்.(அவரது கதாபாத்திரத்தின் மீதுதான்). அட்டகத்தி நந்திதா இதில் பக்குவப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.. கடைசிவரை காதல் என்றே கதை நகராமல் குடும்பம், குழ்ந்தை, பொறுப்பு என இருவரையும் வாழ்க்கை சூழலில் சிக்கவைத்திருக்கிறார் இயக்குனர். அதை நன்றாகவே செய்திருகிறார்கள் இருவரும்.

காமெடி கவிதை எழுதி கலகலப்பூட்டும் சூரி மருத்துவமனை காட்சியில் நம்மை நெகிழ்வக்கிறார். வெங்கட்பிரபுவின் கதாபாத்திரம் படத்துக்கு பக்கபலம். ஆனால் ஜெயபிரகாஷின் கதாபாத்திரத்தில் அழுத்தம் குறைவுதான். ரேணுகா, அழகம்பெருமாள் கச்சிதமான நடிப்பு. கிட்டத்தட்ட தனது வாழ்க்கையையே இயக்குனர் படமாக்கியிருப்பார் போல தெரிகிறது. அதில் சில யதார்த்தமாகவும் சில நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் இருப்பதும் முரண்பாடு. ஆனால் வெற்றிபெற, லட்சியத்தை அடைய விடாமுயற்சி ஒன்றுதான் ஆயுதம் என அழுத்தமாக சொன்ன்னதற்காக இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.