கலைப்புலி தாணு, விவேகா, கங்கை அமரன் மூவருக்கும் என்ன ஒற்றுமை?

இயக்குனர் ரவிமரியாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளா படம் ‘என்ன புடிச்சிருக்கா?’. இந்தப்படத்தில் அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகனாக நடிக்க, ரவிமரியா வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரைட் பியூச்சர் நிறுவனம் சார்பாக பிரகாசம் என்பவர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சமுத்திரகனி, கங்கை அமரன், இசையமைப்பாளர் தேவா, அனுராதா, டிஸ்கோசாந்தி, நிரோஷா உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

கவிஞர் விவேகா பாடல்கள் எழுத, இந்தப்படத்திற்கு ஸ்ரீவித்யா கலை என்பவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பின்னணி பாடகியாக பணியாற்றியவர். இந்தவிழாவில் பேசிய பலரும் இந்தப்படத்தின் தலைப்புடன் தங்களை சம்பந்தப்படுத்தி சுவராஸ்யமாக பேசினார்கள்.

கலைப்புலி தாணு பேசும்போது, “இந்தப்படத்திற்கு ‘என்ன புடிச்சிருக்கா?’ என கேள்வியில் தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.. நானும் ‘யார்?’ என்று கேள்வி கேட்கின்ற டைட்டிலுடன் கூடிய படத்தை தயாரித்துதான் தயாரிப்பாளராக அறிமுகமானேன்” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய கவிஞர் விவேகா, “நான் எழுதிய முதல் பாடல் கூட ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?’ என கேள்வி கேட்கும் விதமாகத்தான் ஆரம்பமானது” என்க, இறுதியாக பேசவந்த கங்கை அமரன் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?.. “நான் முதன்முதலாக எழுதிய செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே பாடலில் கூட என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ? என கேள்வியுடன் தான் ஆரம்பித்திருப்பேன்” என்றார்.

ஆக, திரையுலகில் பிரபலமான பலர் தங்களது ஆரம்பத்தை ஒரு கேள்விக்குறியுடன் தொடங்கி இன்று வெற்றியாளர்களாக வலம் வருவதுபோல இந்தப்படத்தின் இயக்குனர் சுப்புராஜூம் வெற்றியாளராக வலம் வருவார் என நம்பலாம்.