“தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்கவேண்டும்” –வைரமுத்து நடைப்பேரணி …!

தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாய் ஒரு பாடமாக்கக் கோரியும், தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்கக் கோரியும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டியும் ஜூலை 12ஆம் நாள் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கோவையில் “தமிழ்நடை”ப் பேரணி நிகழ இருக்கிறது. இந்தப் பேரணியில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.

அன்று காலை 7 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் தொடங்கும் இந்தப் பேரணி வி.கே.கே.மேனன் சாலையில் நிறைவடைகிறது. தொடர்ந்து ஜூலை-13ல் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கலந்து கொள்ளும் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா மற்றும் வைரமுத்து மணிவிழா கோவை கொடீசியா அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் நாக்கு தலைமுறை இயக்குனர்களான பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வைரமுத்துவை வாழ்த்த இருக்கின்றனர். விழாவில் “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் ‘ என்னும் தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பல்கலைக்கழகங்களின் 60 ஆய்வேடுகள் தொகுதி வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய வைரமுத்து, “இந்த விழா இலக்கியவிழா மற்றும் எனது மணிவிழாவாக நடைபெருவதாக இருந்தாலும் இதன் நோக்கமே திருக்குறளை தேசியநூலாக்க வேண்டும் என்பதும் தமிழை நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக்கவேண்டும் என்பதும் தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும் என்பதும் தான்” என குறிப்பிட்டார்.