ஸ்டார் வாரிசு என்றால் நடிகனாகத்தான் வேண்டுமோ? கேட்கிறார் சூப்பர்ஸ்டார்..!

பிரபல நடிகர்களின் வாரிசுகள் இஞ்சினியர், டாக்டர் என படித்தாலும் கடைசியில் வருதென்னவோ சினிமாவுக்குத்தான். பெரும்பாலும் நடிகராக.. இல்லையென்றால் டைரக்டராக. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது முன்னணி இளம் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர், தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். மேலும் தந்தையைப்போல தமிழிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தனது மகன் ப்ரணவை ஹீரோ ஆக்குவார் என மலையாள திரையுலகமே எதிர்பார்த்துக்கிடக்க மோகன்லாலின் என்னமோ, வேறு மாதிரி இருக்கிறது. தனது மகனுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும் படிப்பதிலும் பல இடங்களுக்குச் சென்று சுற்றிவருவதிலும் தான் ஆர்வமாக இருக்கிறார் என்றும் கூறி மகன் நடிகனாக மாறுவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

வாரிசுகள் நடிக்க வருவது பற்றிய மோகன்லாலின் கருத்தே புதுமாதிரியாக இருக்கிறது. “ஸ்டார்களின் வாரிசு என்பதால் அதையே முன்னுதாராணமாக வைத்துக்கொண்டு நடிக்கத்தான் வரணுமா என்ன? அது தவறானதும் கூட.. அவர்களுக்கு நடிக்கவோ அல்லது சினிமா துறையிலோ விருப்பமில்லை என்றால் அவர்களை வலிந்து திணிக்கக்கூடாது.. அவரவர்க்கு விருப்பமான துறைகளை அவர்களையே தேர்ந்தெடுக்க விட்டுவிட வேண்டும்” என்கிறார்.. சரி.. மோகன்லால் சொல்லிவிட்டார்.. காலம் அப்படி விட்டுவிடுமா என்ன?