மொராக்கோ காவல்துறையினரிடம் சிக்கி தவித்த ஜீவாவின் “யான்” படக்குழு:

பிரபல ஒளிப்பதிவாளர் திரு. ரவி.கே.சந்திரன் “யான்” திரைப்படத்தின் மூலமாக முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். பெரும்பாலம் குடிகார கதாநாயகனாக நடிக்கும் ஜீவா, இந்த திரைப்படத்திலும் குடிகார கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் மகள் துளசி நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பிரகாஷ் ராஜ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரனின் உதவியாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் நிறுவனத்திற்காக எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

“யான்” திரைப்படத்தில் மொரோக்கோ நாட்டில், ஒரு சாலையோரத்தில் ஜீவா தீவிரவாதிகளால் கடத்தப்படுவதை போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை கேள்விப்பட்ட மொரோக்கோ நாட்டின் காவல்துறையினர் உடனடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, “எங்கள் நாட்டில் தீவிரவாதிகள் கடத்துவதை போல் படம் பிடித்தீர்கள் என்றால் அது எங்கள் நாட்டிற்க்கு அவப்பெயர்” என கூறி கேமரா மற்றும் படப்பிடிப்பு கருவிகளை கைப்பற்றி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ரவி.கே.சந்திரன், நடிகர் ஜீவா மற்றும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். படப்பிடிப்பு கருவிகளை கைப்பற்றியது மட்டுமின்றி, அழைத்து சென்ற படக்குழுவினர் மீது மொரோக்கோ காவல்துறையினர் வழக்கு போட முற்பட்டனர்.

பின்னர், படக்குழுவினர் அவர்களை மொரோக்கோ நாட்டிற்க்கு அழைத்து சென்ற டூரிஸ்ட் புரோக்கரை அணுகியுள்ளனர். “யான்” படக்குழுவினர் மற்றும் டூரிஸ்ட் புரோக்கர் கெஞ்சுதலுக்கு இணங்க, மொரோக்கோ காவல்துறையினர் “யான்” படக்குழுவினரிடம் மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு படக்குழுவினரை மன்னித்து அனுப்பினர் என படக்குழுவினர் மத்தியில் மற்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் செய்தி கசிந்து கொண்டிருக்கிறது.

பின்னர் அந்த காட்சியை மீண்டும் படம் பிடிக்க, சென்னை ஈ.சி.ஆர் சாலை ஓரம், மொராக்கோ சாலை போல செட் போடப்பட்டது. மொராக்கோ நாட்டின் சாலை போல் அமைக்கப்பட்ட அந்த செட்டில் ஜீவா’வை தீவிரவாதிகள் கடத்துவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கார் நம்ம ஒளி ஓவியர் ரவி.கே.சந்திரன், படம் நல்ல வந்திருக்கணும் என்று எங்களுக்கு ஆசைதான்.