நள்ளிரவில் ஸ்டாலின் – வைகோ ரகசிய சந்திப்பு..!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.ஈரோட்டில் செப்டம்பர் மாதம் ம.தி.மு.க.வின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி, குமாரசாமி ஆகிய வெளிமாநில தலைவர்களையும் ம.தி.மு.க மாநாட்டில் பங்கேற்க வைத்து மோடி அரசுக்கு எதிரான பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்த வைகோ தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு வைகோ தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். வைகோ ஸ்டாலின் வீட்டுக்கு தான் செல்கிறார் என்கிற தகவல் அவரது உதவியாளருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. ஸ்டாலின் – வைகோ சந்திப்பு நிகழ்ந்தது நேற்று பிற்பகலுக்கு பிறகே ஊடகங்களுக்கு கூட தெரியவந்தது. அந்த அளவிற்கு ஸ்டாலின் – வைகோ சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

சரி எதற்காக இந்த சந்திப்பு? தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் ம.தி.மு.க.வின் இடம் என்ன என்பது தான் வைகோவுக்கு நீண்ட காலமாக இருக்கும் சந்தேகம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – பா.ம.க – தே.மு.தி.க கூட்டணியில் இடம் பெற்று வைகோ 4 சீட்டுகளை பெற்றார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் 4 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் வைகோ உறுதியாக உள்ளார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் சீட் ஒதுக்கீடு குறித்து தி.மு.க நீண்ட நாட்களாக அமைதி காத்து வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீட் ஒதுக்கீடு பற்றி பேசிக் கொள்ளலாம் என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால் வைகோ அதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் இணைந்த போது 6 தொகுதி உறுதி என்று சொல்லிவிட்டு பின்னர் நான்கு தொகுதியாக குறைத்துவிட்டார்கள். அந்த நிலை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வந்துவிடக்கூடாது என்பதில் வைகோ உறுதியாக உள்ளார்.எனவே தான் ஸ்டாலினை சந்தித்து ம.தி.மு.க.வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வைகோ நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை சென்றதாக கூறப்படுகிறது.

Leave a Response