காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன்-ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி..!

காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்ரு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான கிருஷ்ண மூர்த்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி முன்னெடுப்பு முயற்சிகளும் நடந்துவருகின்றன.

தேசிய அளவிலான மூன்றாவது அணியில் தெலுங்கு தேசம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், மஜத-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியமைத்து ஆட்சியமைத்துள்ளன. கர்நாடக முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும்படி தன்னை சந்திரபாபு நாயுடுவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் கேட்டுக் கொண்டதாக கூறியிருந்தார்.

அதனால், காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கலாம் என ஆந்திராவில் பரவலாக பேசப்பட்டது. இதை தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் சிலரும் ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான கிருஷ்ண மூர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிருஷ்ண மூர்த்தி, காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது. ஒருவேளை இருகட்சிகளிடையே கூட்டணி அமைந்தால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்வேன். கூட்டணி குறித்த கட்சியின் கருத்தையே நான் தெரிவிக்கிறேன். அது எனது தனிப்பட்ட கருத்து அல்ல என அதிரடியாக தெரிவித்தார்.

Leave a Response