வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படம் “கண்ணா லட்டு திண்ண ஆசையா”. அதே நட்சத்திர கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாகி வரும் படம் “வாலிப ராஜா”.
“கண்ணா லட்டு திண்ண ஆசையா” நாயகன் சேது, நகைச்சுவை நாயகன் சந்தானம், நாயகி விஷாகா நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக பாலிவுட் நடிகை நுஷ்ரத் நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவி கணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ரா லட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெறுகிறது.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். சேது டிசைனராக வருகிறார். சந்தானம் மனநல மருத்துவர். விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவி.
“வாலிப ராஜா” என்பது சந்தானத்தின் பெயர் தான். சைக்கிரியாட்டிஸ்ட் பாத்திரத்தின் பெயர் அது. சந்தானம் இத்துறையில் சென்னையில் பிரபலமானவர். அவர் படத்தின் கதைபயணத்தில் முக்கிய பயணியாக இருப்பதால் அந்த பாத்திரப்பெயரே படப்பெயராகி இருக்கிறது.
“வாலிப ராஜா” என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம் என்று எச்சரிக்கையாகக் குறிப்பிடும் சாய் கோகுல் ராம்நாத், “இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி என்டர்டெயினர்”. குடும்பத்துடன் வந்து பார்க்கும் படியான கலகலப்பான படமாக இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார்.
நகரம் சார்ந்த கதை இது. சென்னை, பாண்டிச்சேரியில் இதுவரை 26 நாட்களில் பாதிப்படத்தை முடித்து இருக்கிறார். மீதி படத்துக்கு மதுரை, குற்றாலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். “கண்ணா லட்டு திண்ண ஆசையா” வெற்றிக் கூட்டணியை வைத்து அடுத்து ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் உருவானதே “வாலிப ராஜா” படக்குழு. திரைக்கதையில் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத்துடன், கணேஷ்ராஜ் இணைந்துள்ளார்.
ஒளிப்பதிவு – லோகநாதன். இவர் தெலுங்கில் 5 படங்களிலும் 8 மலையாளத்தில் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது ஒளிப்பதிவில் மலையாளத்தில் வந்த “உஸ்தாத் ஓட்டல்” பல விருதுகளை குவித்த படம்.
இசை-ரதன். இவர் “அந்தால ராட்சசி” போன்று தெலுங்கில் 3 வெற்றிப் படங்களில் இசையமைத்தவர். படத்தொகுப்பு – சத்யராஜ். இது குடும்பச் சித்தரம் தான். ஆனால் சிக்கனப் படமல்ல. தாராளமாக செலவு செய்துள்ளார்களாம். வேகமாக வளர்ந்து வருகிறான் “வாலிப ராஜா”



