ராஜா ராணி – விமர்சனம்!!

raja-rani-release-date-posters01

தொலைந்து போன காதலை மனதில் வைத்து கொண்டு, திருமணத்திற்கு பிறகு வரும் காதலை இழக்ககூடாது என்பது தான் படத்தின் கரு. ஒவ்வொரு காதல் தோல்விக்கு பின்னரும் ஒரு வாழ்க்கை உள்ளது, நம்ம கூட இருக்கறவங்க நம்ம விட்டு போய்ட்டங்கனா நாமளும் போகணும்னு அவசியமில்லை. என்னைக்காவது ஒரு நாள் நாம ஆசைப்பட்ட மாதிரி நம்ம வாழ்க்கை மாறும், இதை ஒவ்வொரு காதலர்களுக்கும் ஒரு மெசேஜ் மாதிரி சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதில் வெற்றியும் பெறுகிறார் புதுமுக இயக்குனர் அட்லி.

ஆர்யாவும் நயன்தாராவும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் இல்லற வாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்தது போல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட மௌனராகம் மாதிரி. ஆனால் இங்க ஒருவரையொருவர் டார்ச்சர் பண்ணிக்கிட்டு ஒரே வீட்டுக்குள்ள இருக்காங்க.

ஒருநாள் நயன்தாராவுக்கு வலிப்பு வர, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் ஆர்யா. சிகிச்சைக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பும் நயன்தாராவிடம், எப்படி இதுபோல் ஆனது என ஆர்யா விசாரிக்கிறார். அப்போது, நயன்தாரா தான் ஏற்கெனவே ஜெய்யை காதலித்ததாகவும், அவன் தற்கொலை செய்து கொண்டதையும் ஆர்யாவிடம் சொல்கிறார். இதைக் கேட்கும் ஆர்யா, நயன்தாரா மீது காதல் வயப்படுகிறார். ஆனால், நயன்தாரா ஆர்யாவை வெறுத்தே ஒதுக்குகிறார்.

ஆர்யாவை நயன்தாரா வெறுப்பதைக் கண்டு ஆர்யாவின் நண்பரான சந்தானம், நயன்தாராவிடம் ஆர்யாவின் கடந்தகால காதலை போட்டு உடைக்கிறார். இதைக் கேட்கும் நயன்தாராவுக்கு ஆர்யா மீது மரியாதை ஏற்படுகிறது. இறுதியில், இருவரும் மனம் மாறி இல்லற வாழ்க்கையில் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

ஆர்யா தனது இயல்பான கேரக்டரில் நடித்திருக்கிறார். மிகவும் ஜாலியாக, திருமணத்திற்கு பிறகு தன்னை மதிக்காத நயன்தாராவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. இன்னொரு நாயகி நஸ்ரியாவுக்கு இணையாக இன்னும் அழகாகவே இருக்கிறார்.படம் முழுக்க இவர்தான் மனதில் நிற்கிறார்.

எங்கேயும் எப்போதும் போல வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெய். நகைச்சுவைக்கு ஆர்யாவின் நண்பராக சந்தானம், ஜெய்யின் நண்பராக சத்யன் என இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள்.

வேற ரூட்டுல களம் இறங்கியிருக்கும் சத்யராஜ், இப்படத்திலும் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். இன்னும் இளமையாக நடித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சூப்பர். அதை காட்சிப்படுத்திய விதம் அருமை. பின்னணி இசையை படம் முழுக்க இழையோட விட்டிருக்கிறார்.

புதுமுக இயக்குனர் அட்லி, ஷங்கரின் உதவியாளர் என்பதை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நிரூபிக்கிறார். மிகவும் ரிச்சாக இருக்கிறது படம். அதே சமயத்தில் ஒளிப்பதிவாளரின் உதவியோடு கலர்புல்லாகவும் காட்சிகளை கொடுத்துள்ளார். ஆக புதிதாக திருமணம் ஆன ஜோடிகள் நிச்சயம் காணவேண்டிய படம்.