யானையுடன் நடித்த சந்தானம்!!

santha

நடிகர் சந்தானமும், விடிவி கணேஷும் இணைந்து ‘இங்க என்ன சொல்லுது’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்கள். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து ‘தேவதாசன்’ என்ற யானையும் நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் வாளையாரில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. அங்கு சந்தானமும், விடிவி கணேஷும் யானையுடன் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

யானையுடன் நடித்த அனுபவம் குறித்து விடிவி கணேஷ் கூறும்போது, “இந்த படத்தில் 10 நிமிடத்திற்கு யானையுடன் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்காக ஒரு யானை எங்களுக்கு தேவைப்பட்டது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இங்கிருந்த ஒரு யானை மூன்று பேரை கொன்றிருக்கிறது என்று கேள்விபட்டோம். அதனால், யானையுடன் நாங்கள் நடிப்பது குறித்து படக்குழுவினர் பயந்தனர். ஆனால், நாங்கள் யானையுடன் நடித்தே தீருவோம் என்பதில் உறுதியாக இருந்தோம். அப்போதுதான், தேவதாசன் என்ற யானை எங்களுக்கு கிடைத்தது.

இந்த யானையை பார்த்துக் கொள்வதற்காக 6 பாகன்களை நியமித்திருந்தோம். யானையை கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக இருக்க விட்டோம். முதலில் நாங்கள் யானையில் அருகில் செல்லவே பயந்தோம். யானையும் எங்களிடம் வர தயங்கியது. நாளடைவில் எங்களால் யானையுடன் சகஜமாக பழக முடிந்தது. நல்ல சத்துள்ள உணவுகளை கொடுத்தோம். கேமரா முன்னாலும் நன்கு ஒத்துழைத்தது. படப்பிடிப்பு முடிவதற்குள் எங்களுக்குள் ‘தேவதாசன்’ மீது தனி பாசமே வந்துவிட்டது” என்றார்.