நடிகர் சங்க பொதுகுழுவில் குமரிமுத்துவை நீக்க எதிர்ப்பு!!

Nadigar Sangam

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 60-வது பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. 1970-ல் இருந்து 2013 வரை அறிமுகமான நடிகர்-நடிகைகளின் புகைப்படங்கள் அடங்கிய கட்-அவுட்கள் அரங்கின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.

பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி, காமராஜர் அரங்கின் உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான நாடக நடிகர்கள் தனி பஸ்களில் வந்திருந்தார்கள்.

நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, ஆதி, சிவா, சாந்தனு, ஜித்தன் ரமேஷ், விஷ்ணு, ரமணா, சந்தானம் ஆகியோர் நீலநிற ஜீன்ஸ் பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார்கள். இந்த 11 பேர்களும் 3 கார்களில், ஒரே நேரத்தில் வந்து இறங்கினார்கள். சூர்யா, கார்த்தி, இவர்களின் தந்தை சிவக்குமார் ஆகிய மூன்று பேரும் தனித்தனி கார்களில் வந்தனர்.

மற்றும் நடிகர்கள் கார்த்திக், சுந்தர் சி., நரேன், ஷக்தி, ராஜேஷ், பொன்வண்ணன், எஸ்.வி.சேகர், கருணாஸ், நாசர், பிரசன்னா, நகுல், இதார்த், மயில்சாமி, மன்சூர் அலிகான், விச்சு, ஸ்ரீகாந்த், கே.ராஜன், சண்முகராஜன், ஜாக்குவார் தங்கம், ஏ.எல்.அழகப்பன், குமரிமுத்து, நடிகைகள் ஹன்சிகா, சோனா, நளினி, சி.ஐ.டி. சகுந்தலா உள்பட ஏராளமான நடிகர், நடிகைகளும் வந்திருந்தார்கள்.

பொதுக்குழு கூட்டம் சரியாக மாலை 4 மணிக்கு தொடங்கியது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவி வரவேற்று பேசினார். பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத்தலைவர் கே.என்.காளை ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.செல்வராஜ் ஆண்டறிக்கை படித்தார். கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் “நடிகர் குமரிமுத்துவை பொதுக்குழுவில் இருந்து நீக்ககூடாது என்று நடிகர்கள் சிவகுமார், நாசர், விஷால் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அவர் ஒரு மூத்த நடிகர் அவரை எப்படி நீக்கலாம் என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து தலைவர் சரத்குமார் இதுகுறித்து உங்களின் கோரிக்கைகளை ஏற்கிறேன், மீண்டும் பரிசீலனை செய்வோம்” என்றார்.

பொதுக்குழு கூட்டம் முடிந்து வெளியே வந்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நிருபர்களிடத்தில், ‘‘சினிமா நூற்றாண்டு விழாவுக்காக ரூ.10 கோடி நிதி உதவி செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பிலும், திரை உலக சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’’. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.