ரூட்டை மாற்றி அன்பை சொல்லும் இயக்குனர் சாமி!

F43B5900

‘மிருகம்’, ‘உயிர்’, ‘சிந்து சமவெளி’ போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் சாமி. தற்போது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் ‘கங்காரு’  படத்தை இயக்கி வருகிறார். படம் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

அமைதிப்படை – 2 படத்தை தயாரித்த V-ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் புதுமுக நாயகனாக அர்ஜுனா நடிக்கிறார். வர்ஷா அஸ்வதி நாயகியாக நடிக்கிறார். தங்கை கேரக்டரில் பிரியங்கா, இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். கொடைக்கானலில் ஒரு மலை உச்சியில், இப்படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளனர். இப்படத்திற்கான கதையை சாய்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கங்காரு’ படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது, “கதாநாயகன் தன் தங்கையை கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுகிறார். தங்கை தன்  அண்ணனை கங்காரு போல் காப்பாற்றுகிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் காதலி தன்  காதலனை கங்காரு போல் காப்பாற்றுவார். அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்தவித செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாகவும், இளைஞர்கள் ரசிக்கும்படியாக ஒரு அழகான காதலையும் மையப்படுத்தி இருப்பது எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்தும் படமாக  உருவாக்கியுள்ளார் இயக்குனர் சாமி என்றார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கான பாராட்டு விழாவாக நடக்க உள்ளது. அக்டோபர் 14-ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் வைத்து நடைபெறும். இவ்விழாவுக்கு மிகமுக்கியமான விருந்தினர்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடத்த உள்ளது V-ஹவுஸ் புரொடக்சன்ஸ்.