“தலைவா” படத்துக்கு தகுதி இல்லை!!

30955_541022502602025_397115869_n

விஜய், அமலாபால் நடித்துள்ள ‘தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தலைவா படக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதற்காக வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ‘தலைவா’ திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரைத்துள்ளனர்.

படத்தை வரி விலக்குக் குழுவில் உள்ள 7 பேர் பார்த்தனர். படத்தைப் பார்த்த குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

“U” சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் அனைவருமே பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி ‘தலைவா’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.