சொன்னா புரியாது – விமர்சனம்!

2012-10-15-Sonnaa-puriyaadhu-336

மாதம் ஒரு ரிலீஸ் செய்யும் சிவாவின் சமீபத்திய ரிலீஸ் சொன்னா புரியாது. படத்தை பார்க்கும் முன்பு சொன்னா புரியாது, படத்தை போய் பாருங்க புரியும் என்று சொல்லி வந்தனர் இயக்குனரும், சிவாவும். போய் பார்த்த பின்பு தான் புரியுது, சொன்னா புரியாது என்று.

புரியுதோ, இல்லையோ. முதலில் கதைக்கு வருவோம். திருமணமே வேண்டாம், வாழ்க்கை முழுக்க தனியாக, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது டப்பிங் ஆர்டிஸ்ட் சிவாவின் ஆசை. அம்மாவுக்கோ சிவாவை கல்யாண ஜோடியாக பார்க்க ஆசை. ஒரு கட்டத்தில் வசுந்தராவை பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார். கல்யாணத்தை நிறுத்த சிவா திட்டம் போடுகிறார். அதே திட்டத்தை செயல்படுத்தி பார்க்கிறார் வசுந்தரா. பின்னர் இருவரின் எண்ணமும் ஒன்று என்பது தெரிந்து இருவருமே திட்டமிட்டு திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர்.

திருமணம் நின்றபின் சிவாவுக்கு பிடித்த கார் வாங்க ஒரு வாய்ப்பு வருகிறது, அதற்கு வசுந்தராவை பயன்படுத்துகிறார், அவரும் உதவுகிறார், அந்த சமயத்தில் சிவாவை காதலிக்க ஆரம்பிக்கிறார் வசுந்தரா. சிவா மறுக்க, பின் சிவாவுக்கு காதல் வர வசுந்தரா மறுக்க, கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ். இப்படிப்பட்ட கதையில் முழுக்க காமெடியை மட்டுமே நம்பி இரண்டரை மணிநேர படத்தை ஓட்டுகிறார்கள்.

சிவாவுக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஆனால் அதே மாதிரி கதாபாத்திரங்கள், செய்து எத்தனை நாட்களை அவரால் தள்ள முடியும் என்பது கேள்விக்குறி. அதுவும் படம் முழுக்க… முதல் அரைமணி நேரம் பார்க்க முடிகிறது. படம் முடியும் வரை அதனையே பார்க்க அலுப்பு தட்டுகிறது.

வசுந்தரா நன்றாக நடித்துள்ளார். சிவாவின் நண்பர்களாக வரும் இரண்டு பேரும் நன்றாக நடித்துள்ளனர். யதீஷ் மகாதேவ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. கேளு மவனே கேளு, காலியான சாலையில் பாடல்களும் நன்றாகவே உள்ளன. ஒளிப்பதிவாளர் சரவணன் ஒளிப்பதிவில் பாடல்கள் கண்களுக்கு குளிர்ச்சி. பார்ட்டி, பப் போன்றவற்றையும் அழகாக படம் பிடித்துள்ளார்.

படத்தில் வரும் சில காட்சிகள் தமிழ்படம் போலவே இருக்கின்றன. முதல் பாதி வரை படத்தை கண்டிப்பாக ரசிக்க முடியும் என்ற நினைப்பை இரண்டாவது பாதி முடிந்த பிறகு அப்படியே மாற்றிவிட்டார் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ்.