பட்டத்து யானை – விமர்சனம்!

Pattathu_Yaanai_19

தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களை அடுத்து பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் படம் பட்டத்து யானை. இவருடன் விஷால் சேரும் இரண்டாவது படம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம் என நினைக்கும் நேரத்தில் விஷாலுக்கு மீண்டும் மலைக்கோட்டை-2 வை கொடுத்துள்ளார் இயக்குனர்.

கல்யாண வீடுகளில் சமைக்கும் கான்ட்ராக்டர் சந்தானம். அவரிடம் சமையல்காரராக தன் நண்பர்களுடன் வந்து ஐக்கியமாகிறார் விஷால். வந்த முதல் நாளே சந்தானத்தை ஊரை காலி செய்ய வைக்கிறார். சொத்தை வித்து திருச்சியில் ஹோட்டல் ஆரம்பிக்க வருகிறார் சந்தானம். அங்கு நடக்கும் சம்பவங்களில் சந்தானம் ஹோட்டல் ஆரம்பிக்க முடியாமல் போகிறது, விஷாலுக்கு காதல் வருகிறது, மலைக்கோட்டையை போலவே நாயகியை வில்லன்களிடம் இருந்து காப்பற்றி அவரின் கனவை அடைய அனைத்து கஷ்டங்களையும் தாங்குகிறார்.

இவற்றிற்கிடையில் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் வேறு. அவரை போட்டு தள்ள ஒரு குரூப் சுற்றுகிறது. அத்தனையும் சமாளித்து, நாயகியை இலட்சியத்தை நிறைவேற்றுகிறாரா? வில்லன்களிடமிருந்து எப்படி தப்புகிறார்? சந்தானத்திற்கு ஹோட்டல் வைத்து தருகிறாரா? என்பது இரண்டே முக்கால் மணிநேர மரண போராட்டம்.

கடைசியாக நடித்த படங்களில் பெரிய வெற்றி எதுவும் பெறாமல் போராடி வரும் விஷாலுக்கு இந்த படமும் ஒரு pH டெஸ்ட். இஷ்டத்திற்கு வில்லன்களை பந்தாடுகிறார். ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு முதல் படம். பார்ப்பதற்கு அவ்வளவு வசீகரமில்லை. இதில் பள்ளிகூட மாணவி வேடம்.அடுத்தடுத்த படங்களில் கவனம் தேவை.

சந்தானம் காமெடி சில நேரங்களில் ரசிக்க வைக்கிறது, சில இடங்களில் போர். ஜகன், கார்த்திக் சபேஷ், ஜான் விஜய் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். தேவையில்லாமல் பாடல்கள் வந்து இம்சை செய்கின்றன. தமனின் இசையில் என்ன ஒரு அழகி பாடல் ரசிக்க வைக்கிறது, மற்ற பாடல்கள் சுமார் ராகம்.

வில்லன்கள் அவ்வப்போது வந்து உருட்டல், மிரட்டல் என தலைகாட்டிவிட்டு செல்கின்றனர். படத்தின் ஓபனிங்கில் வில்லனுக்கு அப்படி ஒரு மாஸ் பைக் சீன் தேவைதானா? கமெர்சியல் என்று வந்தாலும் கதை மற்றும் திரைக்கதையில் கொஞ்சமாவது கவனம் செலுத்த வேண்டாமா?, அடுத்த சிவகார்த்திகேயன் படத்தில் இந்த குறையை போக்கினால் நிச்சயம் வெற்றிதான் இயக்குனருக்கு…