திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்.
பட்டியலின பழங்குடி வகுப்பை சேர்ந்த இவரது மகளுக்கு 8 வயது ஆகிறது. அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12ஆம் தேதி பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு 12:30 மணி அளவில் நடந்து ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை 12:53 மணிக்கு கடந்து மாந்தோப்புகளின் நடுவில் உள்ள பாதை வழியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் மாந்தோப்பிற்குள் சிறுமியை தூக்கிச் சென்று சீரழித்த அவலம் அரங்கேறியுள்ளது. அதன் பின்னர் அந்த நபர் அவருடைய நண்பர் ஒருவருக்கு இந்தியில் செல்போனில் பேசியுள்ளார்.
அந்நேரத்தில் சிறுமி சுதாரித்துக் கொண்டு மண்ணை வாரி முகத்தில் வீசிவிட்டு தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது கோலத்தை பார்த்து அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.
பின்னர் சிறுமிக்கு காயம் இருந்ததால் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
அதன் பின்னர் மேலும், சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி டி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அங்கு டிஎஸ்பி எட்டு வயது சிறுமியிடம் பெற்றோரை வெளியே நிற்க வைத்து விட்டு தனியாக விசாரணை மேற்கொண்டு அதனை பதிவு செய்துள்ளார்.
அதன் பின் சிறுமி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சிறுமிக்கு அதிக உதிரப்போக்கு இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆர் எஸ் ஆர் எம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சென்னையில் உள்ள ஆர் எஸ் ஆர் எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் தந்தை பார்த்திபன் மற்றும் தாய் கல்பனா பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தங்களது குழந்தைக்கு நேர்ந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் நேரக்கூடாது என்றும் இச்செயலை செய்த கயவனை காவல்துறையினர் கண்டுபிடித்து உரிய தண்டனை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப்போக்கு சமூகத்திலேயே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது



