ஹைதராபாத் தான் எனக்கு வீடு மாதிரி – பிரபு தேவா!

prabu

தமிழில் அறிமுகமாகி, தமிழ் படங்களாலும், தமிழ் மக்களாலும் சம்பாதித்து கார், பங்களா என சொத்துக்களை வாங்கி குவித்த பின்னர், எனக்கு தெலுங்கு சினிமாதான் எல்லாமே..’, ‘நான் பாலிவுட்டைத்தான் நேசிக்கிறேன்…’, ‘மலையாள சினிமாக்கள் மாதிரி சினிமா எடுக்க முடியுமா?’ என்றெல்லாம் அங்கே போய் பேசுவது நடிகர், நடிகைகள் வழக்கம்.

இப்படி சொல்லி விட்டு பின்னர் ஏதாவது பிரச்சினை வந்தால், நான் அப்படி சொல்லவே இல்லை, ரிப்போர்ட்டர் தான் அப்படி எழுதி விட்டார் என பல்டியடிப்பது வழக்கம். இப்போது அந்த பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிரபு தேவா.

இவர் நடன இயக்குநராக அறிமுகமானது ஒரு தமிழ்ப்படத்தில் தான். ஒரு பாடலுக்கு நடனமாடுபவராக வாழ்க்கையைத் தொடங்கி இதயம், சூரியன், ஜென்டில் மேன், வால்ட்டர் வெற்றிவேல் போன்ற படங்களில் நடனமாடினர். ஜென்டில் மேனில் வந்த சிக்குபுக்கு ரயிலே தான் இவரை பாப்புலராக்கியது. ஷங்கர் தான் இவரை காதலன் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். ஒரு தமிழ் முஸ்லிம் பெண்ணைத்தான் காதலித்து கல்யாணம் செய்தார்.

சுத்தமாக மார்க்கெட் போன நிலையில் தான் தெலுங்குக்குப் போனார். இரண்டு படங்கள் இயக்கினார். தமிழில் நான்கு படங்கள் இயக்கியுள்ளார். ஆனால் சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த விழா ஒன்றில் பேசிய பிரபு தேவா, “தெலுங்கு சினிமா எப்போதுமே என் இதயத்துக்கு நெருக்கமானது. காரணம், பாலிவுட்டில் இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம், தெலுங்கு சினிமாவில் நான் சாதித்தவைதான். என் வாழ்க்கையில் அனைத்துமே தொடங்கியது இங்கிருந்துதான். அதனால் ஹைதராபாத் எனக்கு வீடு மாதிரி உணர்கிறேன்,” என்றார்.