இளைஞர்களை இணைத்து படத்தை முடித்த புது இயக்குனர்!

The-team-Vu-makes-an-exclusive-song-for-the-Assistant-Directors-01

சொந்த ஊரில் இருந்து குறைந்தபட்ச படிப்போட நகரங்களுக்கு ஓடி வருபவர்கள் சில வருடங்கள் கழித்து நூறு படித்தவர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு ஏதாவது ஒரு துறையில் பலமடங்கு  உயர்ந்து விடுகிறார்கள். ஏதாவது ஒரு வேலைக்கான படிப்பு என்று படித்து விட்டு வருபவர்கள் தங்களது படிப்பிற்கேற்ற வேலையைத் தேடித் தேடி அலைந்து வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள்.

உ படத்தின் இயக்குனர் ஆஷிக் கடந்த பாராவில் சொன்னது போலத்தான்! அவர் அடிப்படைக் கல்வியும் திரைப்படக்கல்லூரியில் இயக்கமும் கற்றுக் கொண்டுதான் இயக்குனர் எஸ்.எஸ்.குமரனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். எனினும் உதவி இயக்குனராக அவரால் ஒரு படத்தில் கூடப் பணியாற்ற இயலவில்லை.

என்ன நடந்தது என்பதை உ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.எஸ்.குமரனே விவரிக்கிறார், “என் படத்தில் உதவி இயக்குனராகத் தான் வேலைக்குச் சேர்ந்தார் இயக்குனர் ஆஷிக். சூட்டிங்கிற்கு லொகேஷன் பார்க்கப் போனபோதே காணாமல் போய்விட்டார். அப்புறம் என் படம் முடிந்து ஒரு நாள் அவரைத் தொடர்பு கொண்டால் அவரது படத்தையும் முடித்து விட்டு வந்து நிற்கிறார்…

அவரு மட்டுமல்ல என் அணியில் இருந்து நிறையப் பேரை இழுத்துக் கொண்டார்…” என்று கூறியதோடு “பரவாயில்லை என்னுடன் பணியாற்றியிருந்தால் இந்த நேரத்தில் அவரால் படம் இயக்கி  முடித்திருக்க முடியாது.. வாழ்த்துகள்..” என்று மிகவும் பெருந்தன்மையுடன் வாழ்த்தவும் செய்தார்.

இது குறித்து ஆஷிக்கிடம் கேட்டபோது “திரைப்பட இயக்கம் மட்டுமில்லை எந்த துறையானாலும் சாதிக்கும் நேரத்திற்காகக் காத்திருக்காமல், இது தான் நாம் சாதிக்கும் தருணம் என்று எண்ணிக் களத்தில் இறங்கிவிட வேண்டும்..” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “ தனியாக படம் இயக்கிவிடவேண்டும் என்று முடிவு செய்தபோது… என்னைப்போலவே சாதிக்கத்துடித்துக் கொண்டிருக்கும் புதியவர்களை ஒன்றிணைத்தேன்… படத்தின் ஒளிப்பதிவாளர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவருமே 23 வயதிற்குட்பட்டவர்கள்… கதையையும் அதன் திரைவடிவத்தையும் முடிவு செய்யும் ஆற்றலுடன் அத்துனை துறைகளைச் சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து வேலைவாங்க முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தது…படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தம்பி ராமையாவைத் தவிர உ படத்தில் பணியாற்றிய பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களானாலும் சரி நடிகர்களானாலும் சரி அனைவரும் புதியவர்களே… திட்டமிட்டபடி படப்பிடிப்பினை முடித்து விட்டு இன்று உங்கள் முன்னால் எங்களது படத்துடன் நாங்கள் நிற்கின்றோம்…”என்றார்.