சாவு வீட்டில் நடக்கும் அக்கப்போர்! உடன்பால் திரை விமர்சனம்!!

கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் லிங்கா, அபர்ணதி, விவேக் பிரசன்னா, காயத்ரி, தீனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “உடன்பால்”.

சார்லியின் மகன்களாக லிங்கா மற்றும் தீனாவும் மகளாக காயத்ரியும், மருமகனாக விவேக் பிரசன்னாவும் மருமகளாக அபர்ணதியும் இருக்கிறார்கள். தனது கடன் பிரச்சனைகளை தீர்க்க, வாழ்ந்து வரும் வீட்டினை விற்க முடிவு எடுக்கிறார் லிங்கா. வீட்டினை விற்றால் தனக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என காயத்ரியும் ஓகே சொல்கிறார்.

ஆனால், வாழும் வீட்டை விற்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறார் சார்லி. இதனால் கோபமடைகிறார் லிங்கா. இச்சமயத்தில், அருகில் இருக்கும் காம்ப்ளக்ஸில் பணிக்காக செல்கிறார் சார்லி. சார்லி சென்ற காம்ப்ளக்ஸ் இடிந்து விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வர, இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும், இறந்தவர்களுக்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தரப்படும் எனவும் செய்தி வருகிறது.

இதனால், துக்கத்தோடு கலந்து மகிழ்ச்சியிலும் இருக்கின்றனர் குடும்பத்தினர். 20 லட்சத்தில் தனக்கு இவ்வளவு வேண்டும் என்று மாறி மாறி சண்டையிட்டுக் கொள்கின்றனர் லிங்காவும் காயத்ரியும். தனது கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு தனது அப்பாவின் பிணத்தை வாங்க செல்ல முற்படுகிறார். அதன் பிறகு என்ன ஆனது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு பழைய வீட்டிற்குள்ளே முழுக்கதையும் பயணம் ஆகிறது. ஒரு காட்சியோ அல்லது வசனமோ கூட தேவை இல்லையே என்று நம்மால் சொல்ல இயலாது. அந்த அளவிற்கு பக்காவான ஒரு ஸ்க்ரிப்ட் தான் “உடன்பால்”. தினுசான ஒரு காமெடி கதைக்கு, உணர்வு தந்து, க்ளைமாக்ஸை யதார்த்தமாக அமைத்துள்ளார் இயக்குனர் கார்த்தி.

லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா இருவருக்குமான காம்பினேஷன் அனைவரையும் ரசிக்கச் செய்துள்ளது.

கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கதையோடு ஒன்றி படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கின்றனர் அபர்ணதி மற்றும் காயத்ரி. அதிலும், காயத்ரியின் ரியாக்‌ஷன்ஸ் எல்லாமே அல்டிமேட் தான். எந்த இடத்திலும் முகம் சுழிக்கும்படியான ஆபாச காட்சிகள் எதுவும் படத்தில் இல்லாதது படத்திற்கு பலம்.

கடைசி நேரத்தில் வந்தாலும், தனக்கான கவுண்டர் காமெடிகளை தெறிக்க விட்டிருக்கிறார் தீனா.

சார்லியின் அனுபவ நடிப்பு கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை பெற்றுள்ளது.

பணத்திற்காக, பெற்ற பிள்ளைகளே இப்படியெல்லாம் செய்வார்களா என்று எழும் கேள்விக்கு சமகாலத்தில் இப்படியெல்லாம் நடந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

ஒரே வீட்டை பல கோணத்தில் கேமராவை வைத்து நம்மை படம் முழுக்க ரசிக்க வைத்ததில் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் உழைப்பு பாராட்டதக்கது.

ஓட்டுமொத்ததில் ‘உடன்பால்’ திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Response