உத்தரகாண்ட் பேரழிவுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகுமார் & கோ!

IMG_9839

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு, “ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை கடந்த 33 ஆண்டுகளாக ப்ளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசிளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. சிவகுமார் தனது 100வது பட வெற்றி விழாவில் 1979ல் ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கி பரிசளித்து பாராட்டி வருகிறார்.

தொடக்கத்தில் 2850 ரூபாய் அளிக்கப்பட்ட பரிசுத்தொகை, இன்று இரண்டரை லட்ச ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சிவகுமார் பொறுப்பில் வழங்கப்பட்ட இந்த ஊக்கப்படுத்தும் முயற்சியில் பின்பு அகரம் பவுண்டேஷனும் இணைந்து கொண்டது.

உத்திரகாண்ட் பேரழிவு நிவாரணத்துக்காக பிரதமர் நிவாரணநிதியாக 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் சூர்யா அறிவித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தி அனைவரையும் வரவேற்று அறக்கட்டளை வளர்ந்த வரலாற்றை எடுத்துக் கூறினார்.

சிவகுமார் பேசும் போது, “படித்து மேதையான அப்துல்கலாம், சீனிவாச சாஸ்திரி பற்றியும் படிக்காது மேதையான காமராஜர், எம்.ஜி.ஆர், இளையராஜா போன்றவர்கள் பற்றியும் விளக்கினார்.

மேலும் சிவகுமார் அறக்கட்டளை – அகரம் அமைப்புகள் மூலம் ‘வாழை’ அமைப்புக்கு 2 லட்ச ரூயாயும், பேராசிரியர் கல்வி மணி என்கிற கல்யாணி திண்டிவனத்தில் நடத்தும் தாய் தமிழ்ப் பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ‘அகரம்’ ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கினார். . தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி கூறினார்.