சர்ச்சைக்குரிய தலைவன் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகல்?

A-still-from-the-Tamil-movie-Thalaivan

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன், தன் பெயரை பாஸ் என்று மாற்றிக் கொண்டு முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் தலைவன். இந்தப் படத்தை சித்திரைச் செல்வன் என்பவர் தயாரித்தார். டிஎஸ் ரமேஷ் செல்வன் இயக்கினார்.

இந்தப் படம் குறித்து சமீப நாட்களாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் நடித்த பாஸ்கரனை மோசடி குற்றங்களுக்காக கைது செய்தனர். அதன் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வனும் ரூ 1.20 கோடி மோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரமேஷ் செல்வன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் D.S.ரமேஷ் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “D.S. ரமேஷ் செல்வன்  ஆகிய நான் தமிழ்நாடு திரைப்படக்கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் பெற்றுள்ளேன். எனது முதல் திரைப்படம் உளவுத்துறை, அதற்கு பிறகு ஜனனம் திரைப்படத்தை இயக்கி உள்ளேன். கலவரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அது தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளது.

இதற்கிடையே தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. இரவுபகல் பாராமல் தலைவன் திரைப்படத்தின் பணிகளை கவனித்து வந்தேன். திரைப்பட வேலைகள் அதிகமாக இருந்ததால் என்னால் எனது உடல் நிலையை கவனிக்க முடியாமல் இருந்து வந்தது.

எனது உடல் நிலையை கவனிக்காமல் பணி புரிந்து வந்ததால் எனக்கு சர்க்கரை , பிளட் பிரஷர் மற்றும் மன அழுத்தம் அதிகமாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனது மருத்துவர்  கட்டாய சிகிச்சை  எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை (medical advice) வழங்கியுள்ளார்.

எனவே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது இயக்குனராக பணிபுரியும் தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன். இதனை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.