நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராகி, சரியான நேரம் கிடைக்காமல் தற்போது வெளியாகியுள்ள படம் துள்ளி விளையாடு. ப்ரியமுடன், வாட்டக்குடி இரணியன், யூத், ஜித்தன் போன்ற வித்தியாசமான, வெற்றி படங்களை கொடுத்த வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவரும் படம் துள்ளி விளையாடு. ட்ரைலர் மற்றும் போஸ்டரிலேயே வித்தியாசம் காட்டி ஈர்த்த செல்வா, தியேட்டரில் ரசிகர்களுக்கு என்ன தீனி வைத்துள்ளார் என்பது தான் சஸ்பென்ஸ்.
வெவ்வேறு கனவுகளுடன் திரியும் மூன்று இளைஞர்கள், ஒரு அரசியல்வாதி, அவரின் கீழ் வேலை செய்யும் ஒரு தாதா, அவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை என எடுத்துக்கொண்ட பிளாட் சூப்பர். அதை பிரசன்ட் செய்த விதம்?
நல்ல ஒரு அறிவியல் கண்டுபிடிப்போடு ஒவ்வொரு கம்பனிக்கும் அலையும் ஹீரோ யுவராஜ், அரசியல்வாதியாக கனவு காணும் சூரி, பெரிய நடிகராக ஆசைப்படும் சென்றாயன் மூன்று பெரும் நண்பர்கள். அரசியல்வாதியாக ஜெயப்ரகாஷ், அவருக்கு வலது கையாக இருக்கும் தாதா பிரகாஷ் ராஜ் இவர்களை சுற்றி நடக்கும் நடக்கும் கதை. தேர்தல் செலவுக்காக ஜெயப்ரகாஷ் வைத்திருக்கும் 20 கோடி ரூபாயை ரெய்டுக்கு பயந்து டிரைவர் யுவராஜிடம் காரில் கொடுத்து அனுப்புகிறார்கள்.
அந்த பணத்தை பிரகாஷ்ராஜின் ஆட்கள் கொள்ளையடிக்க, ஜெயப்ரகாஷ் தேடி செல்கிறார். 2 கோடி மட்டுமே பிரகாஷ்ராஜிடம் கிடைக்க, மீதி 18 கோடியை தேடி அலைகிறார்கள். அந்த பணத்தோடு ராஜஸ்தானுக்கு பறக்கிறார்கள் நண்பர்கள் மூன்று பேரும். அந்த பணம் திரும்ப அவர்களுக்கே கிடைத்ததா? நண்பர்கள் மூன்று பேரின் கனவு என்ன ஆனது என்பதை முழு நீள காமெடி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் வின்சென்ட் செல்வா.
புதுமுகம் யுவராஜ் ஆரவாரமில்லாத, அமைதியான நடிப்பு. தோற்றத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சென்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்.
வெண்ணிலா சூரியின் ஒவ்வொரு காமெடி காட்சியும் சூப்பர். இலவசம் வழங்குவது போல வழங்கி, திரும்ப பிடுங்கி அதை வீடியோ எடுத்து அவர் செய்யும் அலப்பரையில் தியேட்டர் குலுங்குகிறது.
சென்றாயன் பரவாயில்லை. மனோபாலாவுடன் இவர் செய்யும் காமெடிக்கு தியேட்டரில் ஆரவாரம். நிறைய காட்சிகள் போர்.
நாயகியாக தீப்தி. சொல்லிகொள்ளும்படியான ரோல் இல்லை. திணிக்கபட்டது போல் ஒரு உணர்வு. இதில் அசின் தங்கை, நகை திருட்டு, போட்டோ மார்பிங் என தேவையில்லாத சீன்கள் நிறைய.
படத்தின் இரு முக்கிய கேரக்டர் பிரகாஷ்ராஜ், ஜெயப்ரகாஷ். பிரகாஷ் ராஜும், சிங்கமுத்துவும் செய்யும் காமெடி பெர்பெக்ட். ஜெயப்ரகாஷ் அரசியல்வாதியாக அசத்தல் நடிப்பு.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை பெரிய மைனஸ். பாடல்கள் அனைத்தும் பழைய பாடல்களின் தழுவல் போல இருக்கிறது.பின்னணி இசையில் நிறைய இரைச்சல்.
பூபதியின் வேகமான ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஆனாலும் படத்தின் வேகத்துக்கு தடையாக பாடல்கள் உள்ளன. தேவையில்லாத காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் வின்சென்ட் செல்வாவின் முந்தைய படங்களின் வரிசையில் இந்த படமும் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.