கிராமத்து சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அசத்த வருகிறார் துரை சுதாகர்

“களவாணி 2” மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர். படத்தில் வில்லனாக நடித்தாலும், தஞ்சை மக்களிடம் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஹீரோவாக வலம் வருபவர். பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் “டேனி”.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலைகளின் பின்னணியை கண்டுபிடிப்பது தான் கதை. சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் நகரத்தை சார்ந்தே இருந்த நிலையில், இப்படம் கிராமத்தில் நடக்கும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியிருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமியோ அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது. பிறகு வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதையும் கண்டுபிடிப்பது தான் கதை.

“களவாணி 2” படத்தில் தஞ்சை மாவட்ட அரசியல்வாதியாக கலக்கிய துரை சுதாகார், இப்படத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது அளவான நடிப்பு மூலம் அந்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாக கையாளும் துரை சுதாகாருக்கு, இந்த போலீஸ் வேடம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும், என்ற ஆர்வத்தில் இருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், கதாப்பாத்திரம் நன்றாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்கவும் தயாராக இருக்கிறார். அந்த வகையில், “டேனி”-யில் அவர் நடித்திருக்கும் பி.கே.செல்வநாயகம் என்ற போலீஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறும் விதத்தில் அமைந்துள்ளதாம்.

அனிதா சம்பத், வேல ராமமூர்த்தி, யோகி பாபு, கவின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் “டேனி” வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ZEE5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

Leave a Response