மீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

‘நாமே தீர்வு’ என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு, ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, “பாதிப்பு குறைவாக இருக்கும் போது முழுமையான ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் வேளையில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறதே. அரசாங்கத்தின் முடிவு சரியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல் கூறியதாவது:

“சரி – தவறு என்று மீடியா சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை எனக்கும் இருப்பதாக நினைக்கிறேன். என்னை அரசியல் தலைவனாக பார்த்துக் கொள்வதை விட, இந்த நேரத்தில் தமிழனாக சென்னைவாசியாக நினைத்துக் கொண்டால் நீங்கள் சொல்லும் விமர்சனம் பொருந்தும். இதைச் சொல்லிக் கொண்டே இருந்து அரசு செவி சாய்க்காமல் இருப்பதினால், உயிரிழப்பு தான் அதிகமாகும். அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்பதற்காகத் தான் தன்னார்வலர் படையொன்று உருவாக வேண்டும்.

கூட்டம் அதிகமாகக் கூடும் இடத்தில் ஒரு விவேகமான குரல் ஒலிக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடியுங்கள், சானிடைசரை உபயோகியுங்கள், முகக்கவசங்களை அணியுங்கள் என்று சொல்ல வேண்டும். அதே வேளையில் பயந்து, மிரண்டு அதற்கு பலியாகிவிடாதீர்கள். திறந்துவிட்டு விட்டார்கள் என்பது உண்மைதான். மீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள். அவர்கள் வேலைக்கு வந்துதான் ஆகவேண்டும்.

நடுத்தர வர்க்கத்தினர் இன்னும் கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடியும். தினக்கூலி தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை நினைத்துக் கூட அரசு திறந்துவிட்டிருக்கலாம். ஆனால், இப்போது தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் அதற்கு என்ன தற்காப்பு செய்ய முடியும், தீர்வு சொல்ல முடியும் என்பதைத் தான் யோசிக்க வேண்டும். ஆகையால் விமர்சனம் செய்வதற்கு இது நேரமில்லை”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Response