பிரபல இயக்குநர்கள் வெளியிட்ட திகில் ஹாரர் படத்தின் டீசர்…

உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர். சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது, “இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும்.

சாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.

இவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘காஞ்சனா 2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் ‘லட்சுமி என்டிஆர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் வழக்கமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிற சூத்திரங்களில் இருந்து விலகி புதுப் பாணியில் புதுவித பாதையில் பயணிக்கிற கதையில் உருவாகியிருக்கிற படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும். சிண்ட்ரெல்லா என்கிற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.

சிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது இந்த ‘சிண்ட்ரெல்லா’வை ரசித்து அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.” என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.

படம் பார்க்கும் ரசிகர்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை கதையையும் கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று கூறலாம்.

இதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்றவரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் வெளியிட்டார்கள். இருவருமே இளமையும் திறமையும் கொண்ட இந்தப் படக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது படக் குழு.

டீசர் வெளியான சில நொடிகளிலேயே ஹிட்களை அள்ளிக் கொண்டிருக்கிறது.

கீழே உள்ள டீசர் லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கவும்:

Leave a Response