“பூமராங்” விமர்சனம் இதோ..!

இயக்குனர் கண்ணன் இவன் தந்திரன் படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம் தான் இந்த ‘பூமராங்’.

தமிழ்சினிமாவில் எத்தனையோ டூயல் ரோல் கதைகளை நாம் படங்களாக பார்த்திருக்கிறோம். அதிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனையைப் பற்றி துணிச்சலாகப் பேசுகிறது இந்தப்படம்.

தீ விபத்து ஒன்றில் சிக்கி 90 சதவீத தீக்காயங்களோடு முகம் சிதைந்த நிலையில், மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுகிறார் ஹீரோ அதர்வா. கிட்னி மாற்று சிகிச்சை, இதயம் மாற்று சிகிச்சை போல உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவருடைய முகத்தை முகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் அதர்வாவுக்கு பொருத்துகிறார்கள்.

புது முகத்தோடு உலகத்தைப் பார்க்கும் அதர்வாவை அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. தன்னை கொல்லை முயற்சிப்பது யார்? என்கிற கேள்விக்கு விடை தேடிப் போகிறார் அதர்வா. அதன் பின்னணியில் நடந்தது என்ன என்பதை விவரிப்பதே? மீதிக்கதை.

ஹீரோவாக வரும் அதர்வா சிவா சக்தி என்ற இரண்டு கேரக்டர்களில் வருகிறார். சிவாவை விட ப்ளாஷ்பேக்கில் போராளியாக வரும் சக்தி பார்ப்பவர்களை கவர்கிறார். ரொமான்ஸுக்கு அதிக வேலை இல்லை என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிர வைக்கிறார்.

இரண்டு அதர்வாக்களில் சிவாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும், சக்திக்கு ஜோடியாக இந்துஜாவும் வருகிறார்கள். குறும்படம் எடுப்பவராக வரும் மேகா ஆகாஷுக்கு ஒரே ஒரு டூயட் தான். மற்றபடி அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் சக்தியுடன் சேர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடுபவராக வரும் இந்துஜா மனதில் நிற்கிறார்.

இடைவேளை வரையிலான காட்சிகளில் காமெடிக்கு சதீஷ் வருகிறார். ஆர்யா நடத்திய ரியாலிட்டி ஷோ முதல் பல விஷயங்களை டைமிங் வசனங்களாகப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் ஆர்.ஜே.பாலாஜி வெறும் காமெடியனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர கேரக்டரில் வருகிறார். கார்ப்பரேட், அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் மூவரும் சேர்ந்து கொண்டு எப்படியெல்லாம் மக்கள் வரிப்பணத்தையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை சின்னச் சின்ன வசனங்களால் கிழித்து தொங்க விடுகிறார். அவர் பேசுகிற ஒவ்வொரு வசனங்களும் தேர்தல் காலமான இந்த நேரத்தில் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இருப்பது சிறப்பு.

ரதனின் பின்னணி இசையும், பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு, கார்ப்பரேட் சதி, ஆதார் குளறுபடிகள், அரசாங்க ஊழியர்களின் லஞ்சம், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் என எல்லா சமகால சமூகப் பிரச்சனைகளையும் பிரச்சார நெடி இல்லாமல் ஒரே படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

ஒரு மசாலாப் படம் என்றாலே அதில் கண்டிப்பாக சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்கும். இது எப்படி சாத்தியம்? என்று பார்வையாளர்களுக்கு கேள்வி எழுப்பும் அப்படி சில மிஸ்டேக்ஸ் இந்தப்படத்திலும் இருக்கிறது. அதேபோல படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது ‘கத்தி’, ‘அறம்’ போன்ற படங்கள் ஞாபகத்துக்கு வந்து போவதை தவிர்க்க முடியாது.

இவற்றையெல்லாம் தாண்டி நாட்டின் மிக முக்கியப் பிரச்சனைகளான விவசாயம், நீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பு, அதில் நடக்கும் அரசியல் ஆகியவற்றை துல்லியமாகவும், துணிச்சலாகவும் திரைக்கதையாக்கி மக்களுக்கு விழிப்புணர்வைத் தரும் விறுவிறுப்பான படமாகத் தந்த விதத்தில் இயக்குனர் ஆர்.கண்ணனை பாராட்டலாம்.

Leave a Response