நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான ‘பாக்ஸர்’ படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, “இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன. அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான். இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை.
டிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்.
இயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளரும், இந்த படத்தின் இயக்குனருமான விவேக் கூறும்போது, “ஆரம்பத்தில், நான் ஸ்கிரிப்ட் எழுதிய போது, என் மனதில் எந்த ஹீரோவும் இல்லை. ஆனால் பின்னர் இறுதி வடிவம் கொடுத்த பிறகு, அருண் விஜய் சார் அதை 100% முழுமையாகப் பூர்த்தி செய்வார் என்று நம்பினேன். அவரின் உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. யதேச்சையாக தயாரிப்பாளர் மதியழகன் சாரும் இதே கருத்தை உணர்ந்தார். பின்னர் நான் அருண் விஜய் சாரிடம் கதை சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது அவரது நீண்டகால கனவு என்றும் கூறினார். இந்த படம் மிக வேகமான திரைக்கதையில் இருக்கும், காதல், எமோஷனும் இந்த படத்தில் உண்டு.
நடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லண்டனை சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் மொத்த உரிமைகளை கைப்பற்றியிருக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. அருண் விஜய் நவீன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதன் படப்பிடிப்பு துவங்கும்.