நடிகர் சிவக்குமார் சார்பில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன்..!

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் அதே இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிததாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது இளைஞர் ஒருவர் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

கோபமடைந்த சிவக்குமார் செல்போனை கோபமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எத்தனையோ மேடைப்பேச்சுகளில் நல்ல பல கருத்துகளை சிவக்குமார் கூறிய போதும் அது மக்களிடையே சென்று சேராவிட்டாலும் சிவக்குமாரின் இந்த வீடியோ வைரலானது.

சமூகவலைதளத்தில் சிவக்குமாரை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்களும் பறந்தன. செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ரசிகர்கள் அப்படித் தான் உணர்ச்சிவசப்படுவார்கள், ஒரு கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், செல்போனை தட்டிவிட்டது தவறு என மக்கள் நினைத்தால் என் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட்டார் சிவக்குமார்.

இளைஞர் ராகுல் தன்னுடைய செல்போன் உடைந்துவிட்டதாக வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் நடிகர் சிவக்குமார் ராகுலுக்கு தீபாவளி பரிசாக புதிய செல்போனை கொடுத்துள்ளார்.

நடிகர் சிவக்குமார் சார்பில் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு ரூ.21 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவன் செல்போன் தட்டிவிடப்பட்ட காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாக்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Response