தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்!

Theeya-Velai-Seiyyanum-Kumaru-Releasing-Today

கடந்த ஆண்டு கலகலப்பான வெற்றியை கொடுத்து UTVக்கு உற்சாகம் கொடுத்த அதே சுந்தர்.C தான் முகமூடி, தாண்டவம், சேட்டை போன்ற தொடர் தோல்விகளால் துவண்டிருந்த UTVயை மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் வரியிலேயே படத்தின் ரிசல்ட்டை ஈசியாக புரிந்து கொள்ள முடியும்.

உள்ளத்தை அள்ளித்தா முதல் கலகலப்பு வரை ஒவ்வொரு படத்திலும் எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரே இயக்குனர் சுந்தர்.C. இந்த முறையும் ஒரு காமெடி படம், புது டீம், சந்தானம் காமெடி என பக்காவாக தேர்ந்தெடுத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவைதிருக்கிறார் சுந்தர்.C.

கதை சிம்பிள்: IT-யில் வேலை செய்யும் நாயகன் சித்தார்த், சின்ன வயதிலிருந்தே பெண்களால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். ஹன்சிகாவை பார்த்த உடன் மனதில் காதல் மலர்கிறது. எப்படி அவளுக்கு தன் மீது காதல் வர வைப்பது என்று யோசிக்கும்போது மோக்கியா என்ற பெயரில் சந்தானம் லவ் டிப்ஸ் கொடுப்பது தெரிகிறது. சந்தானம் கொடுக்கும் டிப்ஸ் மற்றும் பயிற்சிகளால் சித்தார்த்தின் காதல் கைகூடும் நேரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் குறுக்கிட அந்த காதலை உடைத்து தன் காதலை நாயகன் எப்படி சேர்க்கிறான் என்பது மீதிக்கதை. இந்த கதையை இரண்டு மணி நேர படத்தில் வேகமான திரைக்கதையை இணைத்து வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

ரொம்ப நாட்களாக தெலுங்கு தேசத்தில் குடிகொண்டிருந்த சித்தார்த், தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள நேரத்தில் அனைத்தும் வெற்றி படங்களாக அமைவது அவருக்கு பெரிய பிளஸ். வெறும் சாக்லேட் பாயாக நடித்துவந்த அவர், இந்த படத்தில் காமெடி நடிப்பில் புதிய அனுபவம். முக்கியமாக சந்தானம் வந்த பின்பு உச்சகட்ட காமெடி. சித்தார்த், ஹன்சிகா ஜோடிபொருத்தம் சூப்பர்.

சின்ன குஷ்பூ ஹன்சிகா படத்துக்கு படம் மெருகேறி வருகிறார். இந்த படத்தில் அடுத்த கட்டம். பாடல்களில் அழகாக ஆடியிருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் ஹன்சிகா ரொம்ப கியூட்.

மோக்கியாவாக வரும் சந்தானத்தின் என்ட்ரியே அமர்க்களம். ஒவ்வொரு காதலுக்கும் ஐடியா கொடுத்து, அவர்களை ட்ரெயின் செய்து அனுப்பும் காட்சிகள், சித்தார்த்திடம் பேசும் வசனங்கள் போன்ற காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரம் அடங்க ரொம்ப நேரம் ஆகிறது. இடைவேளைக்கு பின் வரும் ட்விஸ்ட், அந்த பிளாஷ்பேக் காட்சிகள் மிகவும் ரசிக்கவைக்கிறது.

கணேஷ் வெங்கட்ராம், பாஸ்கீ, ஆர்.ஜே.பாலாஜி என அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதம். சிரிப்புக்கும் உத்திரவாதம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு அபாரம். சுந்தர்.சியின் காட்சிகளுக்கு ஏற்ப கலர்புல்லான, நேர்த்தியான ஒளிப்பதிவு. “எங்கேயும் எப்போதும்” சத்யாவின் இசை முந்தைய படங்களுக்கு இணையாக இல்லா விட்டாலும், அழகென்றால் பாடல் மற்றும் பின்னணி இசையில் வேலையை செய்திருக்கிறார்.

காமெடி படங்களுக்கு இப்போது உள்ள டிமாண்ட் அப்படியே வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. நலன் குமாரசாமி மற்றும் வேங்கட் ராமின் வசனம் மற்றும் திரைக்கதை, அதை அழகாக காட்சிபடுத்திய சுந்தர்.சியின் இயக்கம் போன்றவற்றால் தலை நிமிருகிறான் இந்த குமாரு.