ஏழு கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் ஏழு நாட்கள் படங்கள் ஓடினால் அது பெரிய வெற்றியா? – வைரமுத்து

knp-2

பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இப்படத்தில் புதுமுகம் அபி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா என்ற மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் பட்டிமன்ற புகழ் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடிக்கிறார். எல்லா பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழுவினரை வாழ்த்தி கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும்போது, “எஸ்.எஸ்.குமரன் என்னிடம் இந்த படத்தின் கதையை சொன்னார். சரி, நான் பாடல் எழுதுகிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது மற்றொரு ஆச்சர்யமான விஷயத்தை. சார், எல்லா பாடல்களையும் நீங்களே எழுதிக் கொடுங்கள். அதற்கப்புறம் நான் மெட்டுப் போட்டுக் கொள்கிறேன் என்றார்.

இன்று திறமையான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் தனக்கான வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் பாடலாசிரியர்களின் நீண்ட நெடிய வரலாற்றை பார்த்தால் அவர்கள் யாரை விரும்புவார்கள் தெரியுமா? ஜி.ராமநாதனையா, எஸ்.வி.வெங்கட்ராமனையா, எம்.எஸ்.விஸ்வநாதனையா, இளையராஜாவையா, என்று கேட்டால் அவர்கள் விரும்புவது கே.வி.மகாதேவனைதான். அவர் ஒருவர் மட்டும்தான் நீங்கள் வார்த்தைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போங்கள். நான் அதை பாடலாக்கிவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னவர். இல்லையென்றால் ‘கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா’ என்ற வார்த்தைக்கு அவர் மெட்டு அமைத்திருக்க முடியாது.

எல்லா பாடல்களும் எழுதிக் கொடுத்துதான் மெட்டமைக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா மெட்டுகளும் அமைக்கப்பட்ட பின்புதான் பாடல் எழுதப்பட வேண்டும் என்பதும் இல்லை. தேவைப்படுகிறபோது கலந்து செய்தால் பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் தமிழ் மக்களுக்கு தங்கள் விருந்துகளை தனித்தனியாக படைக்கலாம்.

இந்த படத்திற்கு பாடல்களை எழுதிக் கொடுத்த பின்பு அதை பாடலாக்கி எனக்கு போட்டுக் காட்டினார் குமரன். எல்லா பாடல்களையும் மெட்டுப் போட்ட பின்புதான் எழுதிய மாதிரி அவ்வளவு அற்புதமாக வந்திருந்தது. நான் அவரை பாராட்டினேன். கொண்டாடினேன். இந்த நேரத்தில் நான் அவருக்கு சொல்லிக் கொள்வது இதுதான். இனிமேல் குமரன் பாட்டெழுத என்னிடம் கேட்டு வந்தால் எனது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் 175 நாட்கள் படங்கள் ஓடும். கலைஞர், எம்ஜிஆர் போன்றவர்கள் எல்லாம் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் கொடுப்பார்கள். அது மெல்ல மெல்ல மாறி மூன்று வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்றாகியது. அதற்கப்புறம் எட்டு நாட்களை கடந்தால் வெற்றிப்படம் என்றார்கள். இப்போது மூன்று நாட்களை கடந்தாலே அது வெற்றிப்படம் என்கிறார்கள். எதிர்காலத்தில் வெற்றிகரமான மூன்றாவது ஷோ என்று போஸ்டர் அடித்தாலும் ஆச்சர்யமில்லை போலிருக்கிறது. ஏழே முக்கால் கோடி தமிழர்கள் வாழ்கிற நாட்டில் ஏழு நாட்கள் படங்கள் ஓடினால் அது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிற நிலைமைதான் இருக்கிறது.

ஒரு கலைஞன் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பவன் நான். சினிமாவுக்கு வந்த பின்பு நான் எனக்குள்ளே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகள் இதுதான். சினிமா எடுப்பதில்லை. சினிமா தொடர்பான எந்த வணிகத்திலும் ஈடுபடுதில்லை. சினிமாவில் நடிப்பதில்லை. மொழியோடு தொடர்புடைய வேலையை தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று. மனசு பூ போல லேசாக இருக்க வேண்டும். வா என்று அழைத்தவுடன் வந்து நிற்பது மொழி மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை. தமிழுக்கு தொண்டு செய்ய நாம் காத்திருக்கிறோம். நாம் கூப்பிட்டால் ஓடிவந்து தொண்டு செய்ய தமிழ் காத்திருக்கிறது.

உலகத்திலே அதிக தூரம் கொண்டது எது தெரியுமா? நிலாவுக்கும் நமக்குமான தூரம் அல்ல, பூமிக்கும் சூரியனுக்குமான தூரம் அல்ல. ஒருவருடைய பாக்கெட்டுக்கும் இன்னொருவருடைய பாக்கெட்டுக்கும் இடையிலான தூரம்தான். அங்கிருந்து இது இங்கு வந்துவிடாது. ஆனால் தமிழ் நாம் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து டேபிளில் அமர்ந்து கொள்கிறது. அதனால் இந்த தமிழ் வருகிற வழியை அடைத்துவிடக் கூடாது என்பதால்தான் நான் வணிகத்தில் ஈடுபடுவதில்லை” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன் உட்பட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.