‘குறும்படத் திருவிழா’வில் விருதுகளை அள்ளிய “மூன்றாம் தமிழ்”!

IMG_7227

’டாப் 10 சினிமா’ மாதமிருமுறை இதழின் மூன்றாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, குறும்பட படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக துவங்கப்பட்டுள்ளது டாப் 10 சினிமாவின் ‘டாப் 10 டாக்கீஸ்’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் ‘குறும்படத் திருவிழா’வை நடத்தி, அதிலிருந்து சிறந்த படைப்புகளுக்கு விருதும், பரிசும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டிலிருந்து துவங்கிய ‘டாப் 10 டாக்கீஸ்: குறும்படத் திருவிழா 2013’ல், 120க்கும் அதிகமான குறும்படங்கள் பங்கேற்றன. அதிலிருந்து சிறந்த 10 குறும்படங்களை ’டாப் 10 டாக்கீஸ்’ன் நடுவர் குழு தேர்ந்தெடுத்து, சென்னை, ‘4 ப்ரேம்ஸ்’ பிரிவியூ திரையரங்கில் திரையிடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இயக்குனர்கள் சீனு ராமசாமி, மகிழ்திருமேனி, பாலாஜி மோகன், ரஞ்சித், நலன் குமரசாமி, ’பீட்சா 2’ தீபன் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர்கள் யூடிவி தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்‌ஷ்மன், இசையமைப்பாளர் தரண் ஆகியோர் நிகழ்ச்சி நடுவர்களாகப் பங்கேற்க, ‘டாப் 10 சினிமா’ இதழின் ஆசிரியர் ஆர்.தங்க பிரபாகரன் அவர்களை வரவேற்றார். நிகழ்சியில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ‘அக்கு’, ‘பிப்ரவரி 4’, ‘ச்’, ’கேசரி’, ’குரங்கு’, ‘கோணல் சித்திரம்’, ‘கொக்கு’, ’மிஷன் திருவான்மியூர்’, ‘மூன்றாம் தமிழ்’ ஆகிய ஒன்பது படங்கள் திரையிடப்பட்டன. இறுதிச் சுற்றில் இடம் பெற்ற ‘அன்புடன் ஜீவா’ என்ற குறும்படம் சில காரணங்களால் திரையிடப்படவில்லை.

பின்னர், திரையிடப்பட்ட 9 குறும்படங்களிலிருந்து சிறந்த மூன்று குறும்படங்கள் மற்றும் சிறப்பு விருதுகளைப் பெறும் குறும்படங்களுடைய விவரம் நடுவர்களால் வெளியிடப்பட்டது. அதன்படி,

ரா.பச்சமுத்து என்பவர் இயக்கிய ‘மூன்றாம் தமிழ்’ குறும்படம் சிறந்த படமாக ‘முதல் பரிசு’ மற்றும் சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகிய விருதுகளையும், ராணா என்பவர் இயக்கிய ‘குரங்கு’ குறும்படம் சிறந்த படமாக ‘இரண்டாம் பரிசு’ மற்றும் ’சிறந்த இசை’, ‘சிறந்த எடிட்டிங்’ ஆகிய விருதுகளையும்,  ’மிஷன் திருவான்மியூர்’ குறும்படம் சிறந்த படமாக ‘மூன்றாம் பரிசி’னையும் பெற்றது.

இது தவிர, ‘நடுவர்களின் சிறப்பு விருதி’னை ப்ரான்ஸ் தமிழரான ஸ்ரீதயாளன் இயக்கிய ‘கோணல் சித்திரம்’ என்ற குறும்படமும், ’சிறந்த வசனம்’ மற்றும் ’சிறந்த பொழுதுபோக்குப் படமாக’ மஹாவிதுரன் இயக்கிய ‘ச்’ குறும்படமும், ’சிறந்த ஒளிப்பதிவு’க்கான விருதினை ‘கேசரி’ குறும்படமும், ’சிறந்த நடிப்பு’க்கான விருதினை ‘பிப்ரவரி 4’ குறும்படமும் பெற்றது.

விருதுகளோடு, டாப் 10 சினிமா-வின் ‘டாப் 10 டாக்கீஸ் : குறும்படத் திருவிழா 2013’ன் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ‘மூன்றாம் தமிழ்’, ‘குரங்கு’, ‘மிஷன் திருவான்மியூர்’ ஆகிய படங்கள் முறையே ரூ.30000, ரூ.20000, ரூ.10000 ரொக்கப் பரிசினையும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, முதல் மூன்று இடங்களைப் பெறாத மற்ற ஆறு குறும்படங்களுக்கும் ஊக்கத்தொகை என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.

சிறப்பாக நடைபெற்ற ‘டாப் 10 டாக்கீஸ்: குறும்படத் திருவிழா’வின் நிகழ்ச்சியினை தீனா தொகுத்து வழங்கினார். இந்த வருடம் துவங்கி, இனி ஒவ்வொரு வருடமும் ‘டாப் 10 சினிமா’ மாதமிருமுறை இதழின் ‘டாப் 10 டாக்கீஸ்: குறும்படத் திருவிழா’ தொடர்ந்து நடைபெறவிருப்பதாகவும் நிகழ்சியில் அறிவிக்கப்பட்டது.