யமுனா – விமர்சனம்!

yamuna-tamil-movie-photos00-006-640x964

தலைப்பை பார்த்து ஏதோ பேய் படம் என்று நினைத்து உள்ளே செல்பவர்களுக்கு அதிர்ச்சிதான். ஏனென்றால் சந்திரமுகி, காஞ்சனா, அருந்ததி என பெண்களின் பெயரையே பேய் படங்களுக்கு சூட்டி அந்த மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தமிழ் சினிமா ரசிகர்கள். இது பேய் படமெல்லாம் கிடையாது. நாயகனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், நாயகியின் வெளியே தெரியாத வாழ்க்கை என பலவற்றை வைத்து உருவாகியிருக்கிறார் இயக்குனர் E.V.கணேஷ்பாபு.

நாயகன் சத்யா கல்லூரியில் நன்றாக படிப்பவன். இளம் விஞ்ஞானி. அதேசமயம் ஆர்ப்பாட்டமான மாணவன். கல்லூரியில் புதிதாக வந்து சேர்கிறாள் நாயகி. அவளை பார்த்தது முதல் அவள் மீது காதல் கொண்டு அலைகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். அப்போது திடீரென்று நடக்கும் ஒரு சம்பவத்தால் காதல் பிரிகிறது. பின்னர் நாயகன் அதற்கான விடை தேட இறங்க, வேறு பல உண்மைகள் வெளியே வருகிறது. அதனால் அவன் சந்திக்க நேரும் பிரச்சினைகளும், அந்த பிரச்சினைகளை  சமாளித்து நாயகன் வெற்றி பெற்றானா? காதல் ஒன்று கூடியதா? போன்ற கேள்விகளுக்கு விடைதான் இரண்டாவது பாதி.

நாயகன், நாயகியாக புதுமுகங்கள் சத்யா, ஸ்ரீரம்யா. நாயகன் சத்யா கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் முதல் படத்திலேயே இந்த ஓவர் பில்ட் அப் தேவையா? என பார்ப்பவர்களை கேட்க வைக்கிறார். பார்ப்பவர்களை எல்லாம் டேய், ஊய் என பேரரசு ஹீரோ ரேஞ்சுக்கு சவுண்ட் விடுகிறார். அதோடு அவரின் குரல் மைனஸ். மற்றபடி நிறைய விஷயங்களை ஹீரோ கற்றுக்கொள்ளவேண்டும்.

நாயகி ஸ்ரீரம்யா. நல்ல அழகான முகம். கேரக்டருக்கு பொருந்தி போகிறார். நடிக்க நிறைய வாய்ப்பு இந்த படத்தில் அமைந்துள்ளது. உபயோகப்படுத்தி கொண்டுள்ளார்.

முதல் முறையாக வில்லி நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் “எங்கேயும் எப்போதும்” வினோதினி. நாயகியின் அம்மாவா? அக்காவா? என குழம்ப வைத்து இரண்டாவது பாதியில் தன் ரூபத்தை காட்டுகிறார் வினோதினி.

ஆடுகளம் நரேன் நட்புக்காக சிறு ரோலில் வந்து தலையை காட்டிவிட்டு போகிறார். படத்தில் வரும் காமெடி காட்சிகள் ஐயோ முடியல’னு சொல்லவைக்கும் ரகம். இவற்றிற்கு இயக்குனர் கணேஷ்பாபு வரும் காட்சிகள் பரவாயில்லை. இலக்கியனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் படி உள்ளது.

முதல் பாதியில் காதல் கதை போல கொண்டுபோய் இரண்டாவது பாதியில் வேறுசில விஷயங்களை இணைத்து முடிவில் பாவமாய் முடித்துள்ளார் இயக்குனர் கணேஷ்பாபு.