இசையமைப்பாளராக அறிமுகமாகி, தேநீர் விடுதி படத்தின் மூலம் இயக்குநராகி, தற்போது கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருப்பவர் எஸ்.எஸ்.குமரன். இவர் இயக்கத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் இசை வெளியீடு கமலா திரையரங்கில் இன்று காலை நடந்தது. விழாவில் வைரமுத்து பாடல்களை வெளியிட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெற்று கொண்டார்.
விழாவில் பேசிய வைரமுத்து, “படத்தில் கேரளாவிலிருந்து மூன்று பேரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர். தமிழ் நன்றாக பேசவில்லை என்று நீங்கள் பயப்பட தேவையில்லை. தமிழ்பேசும் சிலரை விட நீங்கள் நன்றாகவே பேசுகிறீர்கள். நாயகன் மூன்று நாயகிகளை எப்படி சமாளித்தான் என்று யோசித்தேன். அவனிடம் கேட்டேன் நீங்கள் எந்த ஊர் என்று. அல்லிநகரம் என்றான். அப்போதுதான் புரிந்தது. அல்லிநகரத்தில் இருந்து கலைத்துறைக்கு வந்த யாரும் தோற்றது இல்லை என்று.
இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் என்னிடம் சொல்லிய கதை எனக்கு பிடித்ததால் தான் பாடல் எழுத ஒப்புக்கொண்டேன்.அந்த அளவுக்கு கேரளாவுக்கு போய் அழகான படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வெற்றிபெற்று உங்கள் பணம் உங்களுக்கே நிச்சயம் கிடைக்கும்.வாழ்த்துக்கள்” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ராஜீவ் மேனன், பி.எல்.தேனப்பன், டி.சிவா, பேராசிரியர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.