டீசலை மிச்சப்படுத்த சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவையில்லையே-லாரி உரிமையாளர் சங்க தலைவர்..!

சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே டீசலை மிச்சம்பிடித்து காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

யுவராஜ் மேலும் கூறியதாவது: 80 கிமீக்கு மேல் வேகமாக போகக்கூடாது என்கிறீர்கள். ஆனால் சேலம்-சென்னை நடுவே புதிய 8 வழிச்சாலையில் 3 மணி நேரத்தில் சென்னை சென்றுவிடலாம் என்றும் கூறுகிறீர்கள். இது எப்படி சாத்தியம். இப்போதுள்ள சாலைகளில் டோல் கேட் வசூல் நடக்கிறது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

8 வழிச்சாலை போடுவதற்கு முன்பாக முதல்வருக்கும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் நாங்கள் சில விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம். சென்னை-திண்டிவனம் நடுவேயான சாலையில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஆனால் 10 ஆண்டுகளாக பணம் வசூலிக்கிறார்கள். இதை 6 வழிச்சாலையாக மாற்றினால், சேலத்திற்கு 2 மணி நேர பயண காலத்தை மிச்சப்படுத்தி காட்டுகிறோம்.

வானகரம்-வாலாஜா நடுவே 96 கி.மீ 4 வழிச்சாலையாக உள்ளது. இதை 6 வழிச்சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மாற்றுங்கள். ஒன்றரை மணி நேரத்தை மிச்சப்படுத்தி காட்டுகிறோம். உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை வெறும் சிங்கிள் ரோடாக உள்ளது. இதை 4 அல்லது, 6 வழிச்சாலைகளாக விரிவுபடுத்துங்கள். ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த சாலைகள்தான் முக்கியமானவை.

ஏற்கனவே இந்த சாலைகளில் 10 வருடங்களாக பணம் வசூலிக்கப்பட்டு கோடிக்கணக்கில் குவிந்துள்ளது. எனவே புதிதாக பணம் ஒதுக்க கூட தேவையில்லை. இந்த சாலைகளை விரிவுபடுத்துங்கள். நேரத்தையும், டீசலையும், நாங்கள் மிச்சப்படுத்தி காட்டுகிறோம். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

Leave a Response