ஆளுநர் ஆய்வு குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு : தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு..!

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தி.மு.க. சார்பில், ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் ஆளுநர் மாளிகையோ எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஆளுநரின் பணிகளை தடுத்தால் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. ஆளுநரின் ஆய்வு குறித்து பேசுவதற்கு சட்டசபையில் அனுமதி அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. ஆளுநர் குறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி இல்லை என அவை விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.சபாநாயகரின் பதிலில் திருப்தி அடையாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Response