மும்பையில் கனமழை : மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை..!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மும்பையில் கனமழை கொட்டி வருகிறது. விடாமல் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து , மகார்ஷ்ட்ரா மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டி வருகிறது.

மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை மும்பையை தாக்கும். மித மிஞ்சிய அளவில் கொட்டும் என்றும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் மும்பையில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரெயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் மழை மிதமிஞ்சிய அளவில் பெய்யும் என்றும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Response