ஈரோட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதல் : 20 பேர் காயம் !

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து ஒன்று பர்கூரை அடுத்த கர்கேகண்டிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது.

அதேபோல, கர்கேகண்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து பவானிக்குச் சென்று கொண்டிருந்தது.

அந்தியூர் – பர்கூர் மலைப் பாதையில் வறட்டுப்பள்ளம் அணையிலிருந்து 4-வது கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் சுற்று எனப்படும் மிகக் குறுகிய வளைவில் திரும்பும்போது எதிரெதிரே வந்த இவ்விரண்டு பேருந்துகளும் பலமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர்கள் ராஜேந்திரன் (25), ரகுபதி (25), பயணிகளான அந்தியூர், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (52), சரோஜா (33), பர்கூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (35), மாதப்பன் (45) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசர ஊர்தி வாகனங்களில் காயமடைந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் லேசான காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த பயணிகள் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response