நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கு அரசு தரப்பில் உதவ வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அரசு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக, நெல்லையைச் சேர்ந்த 42 மாணவர்கள் இன்று ரயில் மூலம் கேரளா புறப்பட்டுச் சென்றனர். மே 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாகவே அவர்கள் ரயிலில் கேரளா புறப்பட்டுள்ளனர்.
இந்த பயணங்களால் தங்களுக்கு அலைச்சல் மற்றும் பணச் செலவு ஏற்படுவதோடு, தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.