டெக்சாஸ் நகரில் நடக்கவிருக்கும் FeTNA’வின் 31வது வருடாந்திர மாநாடு…

வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 31’வது வது “தமிழ் விழா” வருகிற ஜூன் மாதம் 29,30, மற்றும் ஜூலை 1’ம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில், டல்லாஸ் நகரத்தில், ப்ரிஸ்க்கோ என்னும் நகரில் மூன்று நாட்கள் ‘மரபு, மகளிர், மழலை’ என்ற தலைப்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

இவ்விழா குழு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாண்புமிகு. மாபோ. பாண்டியராஜன் ( தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ), கல்வியாளர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பேராசிரியர் முனைவர் கா.ஞானசம்மந்தன், விஜிபி சந்தோசம், நடிகர் ஆர்.பாண்டியராஜ், கால்டுவெல் வேல்நம்பி, மது சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் மாபோய் பாண்டியராஜன் பேசியது: “சிக்காகோ உலக தமிழ் மாநாடு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இது அங்கீகாரம் பெற்ற 10வது உலக தமிழ் மாநாடு ஆகும். FETNA பேரவையின் 31வது தமிழ் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன் அறிக்கையில் “செந்தமிழ் இருக்கை செய்வோம்” என்ற வாசகம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் மக்கள் யூதர்களுக்கு இணையானவர்கள். தமிழ் மக்களின் மக்கள் தொகை தமிழகத்தில் மட்டும் 71/2 கோடி உள்ளது ஆனால் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். உலக அளவில் யூதர்களுக்கு இணையாக தமிழ் மக்களின் மக்கள் தொகையும் உள்ளது.யூனஸ்க்கோ உலகத்தின் மதிக்க தகுந்த மொழிகளுள் தமிழுக்கு 14வது இடத்தை கொடுத்துள்ளது. நாம் தமிழை 14வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு கொண்டுவரவேண்டும். உலகத்தில் முதலில் சிங்கப்பூர் தான் தமிழை தங்கள் ஆட்சி மொழியாக அறிவித்தது அதன் பின்னர் இலங்கை போன்ற நாடுகள் அறிவித்தன.

பண்டைய காலத்தில் தமிழர்கள் நாடு பிடிக்க, வணிகத்துக்காக, மருத்துவத்துக்காக, தொழில்நுட்பத்துக்காக என நான்கு அலையாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தனர். நமது புலம் பெயர்ச்சியின் வேர்கள் வித்யாசமாக இருக்கும். யூதர்கள் போல் நம்மை யாரும் விரட்டி அனுப்பவில்லை. ‘டிரினிட்டி ஸ்கூல் ஆப் மியுசிக்’ வெஸ்டர்ன் இசைக்கு இருப்பது போல் இங்கே தமிழ் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாங்கள் ஆராய்ச்சி தளம் ஒன்றை உருவாக்க உள்ளோம். சிக்காகோ ஆறாவது நாடாக உலக தமிழ் மாநாட்டை நடத்துகிறது. அமெரிக்காவில் யூதர்களுக்கு பிறகு அவர்களுக்கு இணையாக அதிகமாக சம்பளம் வாங்கும் இனம் தமிழ் இனம் தான். நமது பெருமையை அமெரிக்கர்களுக்கும், உலகத்துக்கும் புரிய வைக்க வேண்டும்.” என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

விழாவில் ஐசரி கணேசன் பேசியது: “FeTNA பேரவையின் 31வது விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் என்னோட கலந்துக்கொண்டிருக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் மட்டும் இன்றைய தமிழக சட்டப்பேரவையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய ஒரே நபர் ஆவார். விஜிபி சந்தோசம் அவர்கள் தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கே ஒரு திருவள்ளுவர் சிலையை வைப்பவர் . அவருடைய சிறப்பே தனி சிறப்பு தான். தந்தையும் மகனும் சேர்ந்து படிக்கும் ஒரே பல்கலைகழகம் எங்கள் வேல்ஸ் பல்கலைகழகம் தான். இங்கு நடிகர் பாண்டியராஜனும் அவருடைய மகனும் இங்கு வேல்ஸ் பல்கலைகழகத்தில் தான் படிக்கிறார்கள். ஆர்.பாண்டியராஜன் விரைவில் டாக்டர். பாண்டியராஜன் ஆகபோகிறார்.” என்றார் ஐசரி கணேஷ்.

விழாவில் விஜிபி சந்தோசம் பேசியது: “திருக்குறளுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தவர், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று கணியன் பூங்குன்றனார் அவர்களின் வரிகளையும் கூறினார். தமிழ் என்றும் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தமிழ் சங்கம் உள்ளது. FeTNA அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வருடம் நானும் FeTNA தமிழ் விழாவில் கொள்கிறேன்.” என்றார் சந்தோசம்.

Leave a Response